

நாமக்கல்: கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘ராசிபுரத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்’ என சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியானது. மேலும், தொழில்நுட்ப பூங்கா ராசிபுரம் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படும் எனவும் தகவல் பரவியது.
இதை உறுதி செய்யும் வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருவாய்த் துறை அதிகாரிகள் கல்லூரி விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப பூங்காவைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று (10-ம் தேதி) முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபடப்போவதாக இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் கல்லூரி முதல்வர் பானுமதி உள்ளிட்டோர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, ‘கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைத்தால், மாணவர்கள் விளையாட மாற்று இடம் ஒதுக்கப்படும்’ எனத் தெரிவித்தனர். இதை மாணவர்கள் ஏற்காததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனிடையே, மாணவர்கள் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டு மதியம் முதல் வகுப்புகளுக்குத் திரும்பினர்.
இதுதொடர்பாக இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, “கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக முடிவு செய்யப்படும். தற்போது, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என்றனர்.