சென்னை - கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை
சென்னை: நாட்டில் பிரபலமான ரயிலாக அதிநவீன வந்தே பாரத் ரயில் திகழ்கிறது. தற்போதுவரை, பல்வேறு நகரங்களுக்கு இடையே 13வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையேவும், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையேவும் தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்.8-ம்தேதி தொடங்கி வைத்தார். புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள்இயக்கப்படும் இந்த ரயிலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ரயிலுக்கு இருமார்க்கமாகவும் ஒருவாரம் வரை(ஏப்.17-ம் தேதி வரை) டிக்கெட் முன்பதிவு முடிந்து உள்ளது.
இந்நிலையில், சென்னை-கன்னியாகுமரி இடையே வந்தே பாரத்ரயில் சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும்கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வாஞ்சி இயக்கம்நிறுவனத் தலைவர் பி.ராமநாதன்வெளியிட்ட அறிக்கையில், "வடக்கே இருந்து திருச்சிராப்பள்ளிக்கும், மதுரைக்கும் இயக்கப்படும் ரயில்கள் கன்னியாகுமரி வரைநீடிக்கப்படாததாலும், இந்த ரயில்களுக்கு கன்னியாகுமரி வரைஇணைப்பு ரயில்கள் இல்லாததாலும் மதுரைக்கு தெற்கு உள்ளவர்கள் சென்னைக்கு செல்வதற்குப் போதிய ரயில் வசதிகள் இல்லை.
எனவே, மதுரைக்கு தெற்கே உள்ளவர்களின் நலனுக்காக சென்னை-கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில், சென்னைக்கு வந்த பிரதமர் மோடியிடம் சென்னை-மதுரை இடையே வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்க தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
