Published : 11 Apr 2023 06:02 AM
Last Updated : 11 Apr 2023 06:02 AM

புதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனா சிகிச்சை வசதிகள், மருந்து கையிருப்பு தொடர்பாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். உடன், துறைச் செயலர் செந்தில்குமார், மருத்துவமனை டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 2 நாள் கரோனா சிகிச்சை ஒத்திகை தொடங்கியது. புதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தொற்று சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த இரண்டு நாள் ஒத்திகை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று தொடங்கியது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று நடந்த ஒத்திகையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை தொடர்பான மாதிரி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு, மருத்துவ பணியாளர்கள், பரிசோதனைகள், சிகிச்சைக்கு தேவையான வசதிகள், மாத்திரை மருந்து கையிருப்பு, முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடை ஆகியவற்றின் கையிருப்பு, அவசர ஊர்திகளின் எண்ணிக்கை போன்றவை இந்த பயிற்சியின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு இருப்பினை உறுதி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 64,281 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் வசதிகளும் தேவையான அளவு உள்ளது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை 342 இடங்களில் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் தினமும் 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். தற்போது கரோனா தொற்று குழு பாதிப்புகள் இல்லை. தனிநபருக்கான பாதிப்புகள் மட்டுமே உள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருந்துகளை எடுத்துக் கொள்வதும், வீடுகளில் தனிமை படுத்திக்கொள்வதும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது என்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பு மிகப் பெரிய அளவில் வீரியமான தாக்குதலாக இல்லை. அதனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கும் தேவை ஏற்படவில்லை. ஒமைக்ரானின் உருமாற்றமான இன்னொரு வகையிலான பாதிப்பு இந்தியா முழுமைக்கும் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும். அண்மையில் இறந்த மூன்று பேரும் கரோனாவால் இறக்கவில்லை. இணைநோய் பாதிப்புகளால் இறந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது முற்றிலுமாக இல்லாத நிலை தொடர்கிறது. ஆனாலும், தமிழ்நாடு மருந்துவ சேவை கழகத்தின் மூலம் 5,500 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x