

சென்னை: தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சமர்ப்பித்துள்ள மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ள, துபாயில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் அமைத்து தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை உலகளவில் ஒருங்கிணைப்பது, எம்எஸ்எம்இ உற்பத்தி செய்யும் பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சியகம் உருவாக்குவது, ரூ.175 கோடி முதலீட்டில் தொழில் முனைவோருக்கு பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகத்தை கிண்டியில் உருவாக்குவது, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுந்தொழில் முனைவோருக்கு ரூ.48.88 கோடியில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டுவது போன்றவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும்.
தரமான தென்னை நார் பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் வகையில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கு 25 சதவீதம் மானியம் வழங்குவது, தென்னை நார் தரத்தை உறுதி செய்ய ரூ.4 கோடியில் கோவையில் பரிசோதனைக் கூடம் அமைப்பது போன்ற புதிய முயற்சி திட்டங்களை டான்ஸ்டியா வரவேற்கிறது.
அதே சமயம், தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டணத்தை குறைக்க வேண்டும். நலவாரியம் அமைக்க வேண்டும் எனப் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, இக்கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மீண்டும் டான்ஸ்டியா தரப்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. இவ்வாறு மாரியப்பன் தெரிவித்துள்ளார்.