

சென்னை: கடந்த நிதி ஆண்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ரூ.71,955 கோடி அளவுக்கு வைப்புநிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு நிறுவனங்களிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்களின் வைப்புநிதி அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களிடம் இருந்து ரூ.71,955 கோடி அளவுக்கு வைப்புநிதி திரட்டப்பட்டது.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன் அளவும் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.64,140 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டது. பயிர்க்கடனாக மட்டும் 17 லட்சத்து 43,874 விவசாயிகளுக்கு ரூ.13,443 கோடி கடன் வழங்கப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட ரூ.1,448 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, 55,191 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.1,597 கோடி கடன் அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஏழை, எளிய மக்களின் அவசர தேவைக்காக ரூ.35,058 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும், 25 மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கங்களையும் நபார்டு வங்கி உதவியுடன் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் 5,578 விற்பனையாளர் காலிப் பணியிடங்களுக்கும், 925 கட்டுநர் காலிப் பணியிடங்களுக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணி நியமனம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஊழியர்களுக்கு பதவி உயர்வும், புதிய ஊழியர்களுக்கு பணிநியமன ஆணைகளும் விரைவில் வழங்கப்படும்.
மாநில தலைமை கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி கொண்டுவரப்பட்டு, அதன்மூலம் கூகுள் பே, பேடிஎம் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த யுபிஐ வசதி ஏப்.15-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்களை கணினியமாக்கும் பணி ஓரிரு மாதங்களில் முடிவடையும். கணினிமயமாக்கலால், கூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும்.