

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறக்கும் நிகழ்ச்சி நடக்கும் வைகை ஆறு தடுப்பணையில் நிரம்பி உள்ள சேறு, சகதியை தூர்வாரி தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டு சித்திரைத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ம் தேதி நடக்கிறது. அதிகாலை 5.45 மணிக்கு மேல் 6.12 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் திரள்வர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவர். இவர்கள் முந்தைய நாள் மே 4-ம் தேதி இரவு முதலே வைகை ஆற்றின் கரைகளில் திரள்வர்.
ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது ஆற்றின் கரைகளில் இருந்து பார்க்கும் பக்தர்கள் ஆர்வத்துடன் ஆற்றில் இறங்கி கள்ளழகரை நோக்கி பைகளில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்த நிகழ்ச்சி நடக்கும், ஆற்றின் கரைப் பகுதிகள் நெரிசலானவை. தற்போது ஆற்றின் இருபுறமும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் பக்தர்கள் இயல்பாகவே ஆற்றின் கரைகளில் இறக்கி தண்ணீர் பீய்ச்சியடிப்பார்கள். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் ஆற்றின் கரைகளில் நின்று கள்ளழகர் இறங்கும் நிகழ்வை பார்வையிடுவர்.
ஆனால், தற்போது தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருப்பதால் அதைத் தாண்டி பக்தர்கள் ஆற்றில் இறங்குவர். இப்பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையை கட்டியது முதல் தூர்வாரவில்லை. மேலும் தண்ணீர் வந்து பல மாதமாகி விட்டதால் சேரும், சகதியுமாக உள்ளது. இந்த தடுப்பணை 6 அடி ஆழம் கொண்டது.
அதிகாலை வேளையில் பக்தர்கள் ஆர்வ மிகுதியில் ஆற்றில் இறங்கும் பகுதியில் தடுப்பணை அருகே சென்றால் சகதியில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த விழாவுக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். ஆற்றில் சில மாதங்களுக்கு முன்பு ஆங்காங்கே மண் அள்ளப்பட்டு மேடு, பள்ளமாக இருக்கிறது. அதில் தண்ணீர் செல்லும்போது பள்ளங்கள் தெரியாமல் பக்தர்கள் விழுந்து மூழ்கும் அபாயம் உள்ளது.
மேலும் திருவிழாவின்போது, பக்தர்கள், அதிகாரிகள், போலீஸார் உள்ளிட்ட அனைவரின் பார்வையும் கள்ளழகர் நிகழ்ச்சியை நோக்கியே இருக்கும்.
அதனால், ஆற்றில் பெருவாரியாக திரளும் பக்தர்களை போலீஸாரால் கட்டுப்படுத்துவது சிரமமானது. கடந்த ஆண்டு இதே நிகழ்ச்சியில் போலீஸார், கோரிப்பாளையத்தில் ஏவி மேம்பாலம் அருகே திரண்ட பக்தர்களை கட்டுப்படுத்த முயன்றபோது நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்நிகழ்ச்சியின்போது பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவை வெளியே வராமல் மறைக்கப்பட்டு விட்டது.
இதே நெரிசல் வைகை ஆற்றில் நிகழ்ந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடும். அதனால், நங்கநல்லூர் தீர்த்தவாரி அசம்பாவிதம் போல் நடக்காமல் இருக்க பல்துறை அதிகாரிகள் குழு வைகை ஆற்றில் நேரில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக மேற்கொள்ளவும், தடுப்பணையை தூர்வாரி சேறும், சகதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.