கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிக்கு பாதுகாப்பு: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிக்கு பாதுகாப்பு: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கோயம்புத்தூரில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிக்கு தேவைப்பட்டால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மஞ்சு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுதாகர் என்பவரை காதலித்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி திருமணம் செய்து கொண் டேன். நாங்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். எங்கள் திருமணத்தை விரும்பாத எனது பெற் றோர் என்னை ராஜஸ்தானுக்கு காரில் கடத்திச் சென்றனர். எனது கணவர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவின் விசாரணைக்காக நான் இதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டேன். எனினும் என் குடும்பத்தினர் விடுத்த மிரட்டல் காரணமாக அப்போது, என் பெற்றோருடன் செல்லவே விரும்பு வதாக தெரிவித்தேன். அதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர் என்னை கோயம்புத்தூருக்கு கொண்டு சென்று வீட்டில் அடைத்து வைத்தனர். அங்கிருந்து தப்பித்த நான் கடந்த 15-ம் தேதி மீண்டும் எனது கணவருடன் சேர்ந்து விட்டேன். நான் எனது கணவருடனேயே வாழ விரும் புகிறேன்.

எனினும் என் குடும்பத்தினரால் நானும், எனது கணவரும் கவுரவக் கொலை செய்யப்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, எங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ் வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது கணவர் சுதாகருடன் வாழ விரும்புவதாக மஞ்சு நீதிமன்றத்தில் தெரிவித்தார். மஞ்சு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதால் அவர் விவகாரத்தில் தாங்கள் மேற்கொண்டு எதுவும் செய்யப் போவதில்லை என்று மஞ்சுவின் பெற்றோர் தரப்பில் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கினை முடித்து வைத்தனர். மேலும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்ற மஞ்சு மற்றும் சுதாகர் ஆகியோரின் கோரிக்கையை கோவை போலீஸார் பரிசீலித்து, அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in