உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தமிழகத்துக்கான வாய்ப்பு தவறிவிட்டது: கருணாநிதி

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் தமிழகத்துக்கான வாய்ப்பு தவறிவிட்டது: கருணாநிதி
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு தவறிவிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த கோபால் சுப்பிரமணியத்தின் பெயர், நீதிபதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அரசு இவரது பெயரை மட்டும் நிராகரித்துவிட்டதாக செய்தி வந்தபோது, கோபால் சுப்பிரமணியமே பரிந்துரை பட்டியலில் இருந்து வாபஸ் பெறுவதாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டார்.

இதுபற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா கூறுகையில், ‘‘புதிய நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரை மட்டும் மத்திய அரசு தன்னிச்சையாக பிரித்து திருப்பி அனுப்பியது தவறு. அவரை என் வீட்டுக்கு அழைத்து நீண்ட நேரம் பேசினேன். கடிதத்தை வாபஸ் பெறும்படி கேட்டுக் கொண்டேன். அப்படிச் செய்தால் அவரது பெயரை மீண்டும் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்தேன். ஆனால், ஜூன் 29-ம் தேதி அவர் எழுதிய கடிதத்தில் நீதிபதி பரிசீலனையில் இருந்து வாபஸ் பெறுவதை உறுதி செய்திருந்தார். அதனால்தான் அவரது பெயரை மீண்டும் பரிந்துரைக்க முடியவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

கோபால் சுப்பிரமணியம் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, சட்ட அனுபவம் உள்ள மூத்த வழக்கறிஞர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும், சொலிசிட்டர் ஜெனரலாகவும் 8 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சொராபுதீன் வழக்கிலும் சிறப்பு சட்ட ஆலோசகராக செயல்பட்டவர். குஜராத் அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், நரேந்திர மோடியின் ஆலோசகரான அமீத் ஷா சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அதுதான் கோபால் சுப்பிரமணியத்தை நிராகரிப்பதற்கான காரணமாக அமைந்ததோ? எப்படியோ, தமிழகத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு ஒன்று தவறிவிட்டது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in