Published : 01 Jul 2014 12:14 PM
Last Updated : 01 Jul 2014 12:14 PM

தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்தில் புதிதாக 8 முதுகலைப் படிப்புகள்: துணைவேந்தர் வீணை காயத்ரி பேட்டி

தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக 8 முதுகலை படிப்புகள் அறிமுகப் படுத்தப்படுவதாக துணைவேந்தர் வீணை காயத்ரி கூறினார்.

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் தமிழக அரசால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டிஜிஎஸ் தினகரன் சாலை யில் அமைந்துள்ள அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் பிரபல வீணை இசைக் கலைஞருமான வீணை காயத்ரி சென்னையில் நிருபர்களுக்கு திங்கள்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) குரல் இசை, வீணை இசை, வயலின் இசை, குழல் இசை, நாதஸ்வரம், மிருதங்கம், தவில், பரதநாட்டியம் ஆகிய இசை பாடங்களில் முதுகலை பட்டப் படிப்புகளையும் (எம்.ஏ. மியூசிக்), டிஜிட்டல் போட்டோ கிராபி மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்தில் முது கலை பட்டயப் படிப்பையும் அறிமுகப்படுத்துகிறோம்.

பி.ஏ. இசை பட்டதாரிகள் மட்டுமின்றி ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்களும் முதுகலை படிப்பில் சேரலாம். வயது வரம்பு கிடையாது. அடிப்படை இசை அறிவு அவசியம். ஒவ்வொரு படிப்பிலும் தலா 25 முதல் 30 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் பல்கலைக் கழகத்தால் அமைக்கப்படும் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல, முதுகலை பட்டயப் படிப்புக்கும் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருந்தால் போதும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.300 (எஸ்சி, எஸ்சி மாணவர்களுக்கு ரூ.150). கட்டணத்தை ‘Registrar, Tamilnadu Music and Fine Arts University’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டாக பல்கலைக்கழகத்தில் செலுத்தவேண்டும்.

பல்கலைக்கழகத்துக்கு டிடி அனுப்பி தபால் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnmfau.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துக்கான டிடியை இணைத்தும் விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்கள் ஜூலை 2-ம் தேதி (நாளை) முதல் வழங் கப்படும். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை ஜூலை 21-ம் தேதிக்குள் கிடைக்குமாறு பல்கலைக் கழகத்துக்கு அனுப்பவேண்டும். வகுப்புகள் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும்.

இவ்வாறு துணைவேந்தர் வீணை காயத்ரி கூறினார். பதிவாளர் சவரிராஜன் மற்றும் பேராசிரியைகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x