

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடத்தி காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கரோனா கவச உடை அணிந்து ஒத்திகை செய்து காட்டினர்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தமிழகத்தில் பரவலை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'கரோனா' பாதிப்புடன் நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. பிரத்தியேக வார்டுகள், தனி மருத்துவக்குழுவினர் நியமித்து தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு மருத்துமவனையிலும் 'கரோனா' தடுப்பு சிகிச்சை முன்னேற்பாடு பணிகள் நடக்கும்நிலையில் இன்று முதல் தொடர்ந்து 2 நாட்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோய் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக நேற்று மருத்துவமனையில் தற்போது 20 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு, கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மனிதரை போன்ற பொம்மையை ஆம்புலன்சில் கொண்டு வந்த ஊழியர்கள் அவரை ஸ்டெக்ச்சரில் இறக்கி மருத்துவமனையில் அனுமதிக்கும் காட்சியும், அந்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கவச பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சை வழங்க தயாராகும் நிகழ்ச்சியும் செய்து காட்டப்பட்டது.
'கரோனா' நோயாளிகளுக்கு முதலில் மூச்சுதிணறல்தான் ஏற்படும். அதனால், நோயாளி வார்டில் அனுமதிக்கப்பட்டதும், அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு மானிட்டர் கருவி மூலம் சுவாசம் குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது போன்ற ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரோனா நோயாளிகளை கண்டு அஞ்சி அவர்களை புறக்கணிக்காமல் இருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, அந்த நோயாளிகள் சிகிச்சைக்கு வரும்பொழுது அவர்களை வரவேற்பது, நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை செய்வது போன்ற ஒத்திகைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முகக்கவசம் உள்ளிட்டவைகள் இருப்புகள் குறித்தும் மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் இயந்திரம், ஆக்சிஜன் சிலிண்டருன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
'டீன்' ரத்தினவேலு கூறுகையில், ''கரோனா பாதிப்பு அதிகமானால் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கிறது. பாதிப்பு அதிகமானால் 1500 படுக்கை ஏற்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன. இதுதவிர தோப்பூர் அரசு மருத்துவமனைகளிலும் அதிகளவில் படுக்கை வசதிகளும் தயார் செய்வதற்கான வசதிகள் உள்ளன. நோயாளிகளுக்கு தடையில்லா சிகிச்சை வழங்குவதற்கான ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளது. இதுவரை ஒரே ஒரு நோயாளி மட்டும் 'கரோனா' தொற்று பாதித்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுள்ளார்,'' என்றார்.