Published : 10 Apr 2023 04:53 AM
Last Updated : 10 Apr 2023 04:53 AM

சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு,முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் (சிஆர்பிஎஃப்) 9,212 காவலர்கள் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணை, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அலுவல் மொழிகளாக அங்கீகரித்துள்ளது.

ஆனால், சிஆர்பிஎஃப் ஆள்சேர்க்கைக்கான கணினி தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஆர்பிஎஃப் அறிவிக்கையின்படி, மொத்தம் 9,212 காலி பணியிடங்களில், 579 பணியிடங்கள் தமிழகத்தில் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில் 12 மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால், தமிழகத்தில் இருந்து இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கையின் மற்றொரு மறைமுக அம்சமாக, மொத்தம் 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தேர்வு இந்தி பேசுவோருக்கே சாதகமாக உள்ளது. இது தமிழகத்தில் இருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு எதிரானது. இது தன்னிச்சையானது மட்டுமின்றி, பாகுபாடு காட்டக் கூடியதும் ஆகும். அவர்கள் துணை ராணுவப் படையில் பணியாற்றும் வாய்ப்பையும் இத்தேர்வு பறிக்கிறது.

ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கணினி தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு, தேர்வு எழுத விரும்பும் இளைஞர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமையை பாதிப்பதாகவும், அரசுப் பணித் தேர்வில் சமவாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கிறது.

எனவே, தாங்கள் இதில் உடனே தலையிட்டு, இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சிஆர்பிஎஃப்-பில் பணியாற்ற சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் இத்தேர்வை நடத்த ஏதுவாக அறிவிக்கையில் மாற்றம் செய்ய சிஆர்பிஎஃப் அதிகாரிகளை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x