

கோவை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் (எண்: 20644) முதல் சேவை நேற்று தொடங்கியது. கோவை ரயில்நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்ட ரயில், சென்னைக்கு காலை 11.50 மணிக்கு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11.33 மணிக்கே சென்று சேர்ந்தது.
முதல் நாள் பயணம் என்பதால் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் இந்த ரயில் முன் நின்றும், இருக்கைகளில் அமர்ந்தவாறும் புகைப்படங்கள், வீடியோக்களை ஆர்வமுடன் எடுத்துக்கொண்டனர். இந்த ரயிலில் பயணித்த அனுபவம் குறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:
மௌலி, ஜோதிபுரம், கோவை: இன்டர்சிட்டி ரயிலில் ஏசி சேர் கார் வகுப்பில் பயணித்தாலும் அதிர்வுகள் இருக்கும். ஆனால், இந்த ரயிலில் அதிர்வுகள் ஏதும் இல்லை. ரயில் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் டீ அல்லது காபி, 2 பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. சுமார் 8 மணியளவில் காலை உணவு வழங்கப்பட்டது. முன்பதிவின்போது அசைவத்தை தேர்வு செய்திருந்தவர்களுக்கு ஆம்லெட், 2 பிரட், பட்டர், முறுக்கு, லஸ்ஸி ஆகியவை அளிக்கப்பட்டன. சைவத்தில் 2 இட்லி, உளுந்துவடை, பொங்கல், சாம்பார், சட்னி, கேசரி, முறுக்கு, லஸ்ஸி ஆகியவை அளிக்கப்பட்டன.
காலை 10 மணியளவில் மீண்டும் ஒரு டீ அல்லது காபி அளித்தனர். அடுத்து எந்த ரயில்நிலையம் வரப்போகிறது என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு செய்கின்றனர். உணவுடன் சேர்த்து ஏசி சேர் கார் வகுப்பில் ரூ.1,215, எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் ரூ.2,310 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி இந்த ரயிலில் பயணிக்க இயலாது. கட்டாய தேவை இருக்கும் நாளில் பயணிக்கலாம். ஏசி சேர் கார் வகுப்பில் கட்டணத்தை சற்று குறைத்து ரூ.1,000 என நிர்ணயித்தால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பார்வதி, பாலக்காடு, கேரளா: இந்த ரயிலில் பயணிக்க பாலக்காட்டில் இருந்து கோவை வந்து, நானும், எனது மகனும் பயணித்தோம். விமானத்தில் பயணிப்பது போன்ற சொகுசான, பாதுகாப்பான பயணமாக உணர்ந்தோம். டிக்கெட் கட்டணம் எனக்கு அதிகமாக தெரியவில்லை. 3-ம் வகுப்பு ஏசி பெட்டியில், தட்கலில் முன்பதிவு செய்தால் இதே கட்டணம் வந்துவிடும். அதில், இரவு நேரம் முழுவதும் குழந்தையுடன் பயணிப்பதற்கு பதில், காலையில் இந்த ரயிலில் ஏறினால் மதியம் சென்னை சேர்ந்துவிடலாம் என்பதால் சவுகரியமாக உள்ளது. பாலக்காடு வரையும் இந்த ரயிலை நீட்டித்தால் கேரள மக்களுக்கும் உதவியாக இருக்கும்.
மதுமிதா, கணபதி, கோவை: உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். சற்று விரைவாக வருவதற்கு இந்த டிக்கெட் கட்டணத்தை அளிக்கலாம். சென்னையில் இருந்து கோவை வருவோருக்கும் இந்த ரயில் சவுகரியமாக இருக்கும். ஏனெனில், இன்டர்சிட்டி ரயில் இரவு 10 மணிக்கு மேல் கோவை வரும் நிலையில், இந்த ரயில் இரவு 8 மணியளவில் வந்து சேருவதால், ரயில்நிலையத்தில் இருந்து வீடுகளுக்கு முன்கூட்டியே பேருந்துகள், இதர வாகனங்களில் சென்று சேர முடியும்.
உணவின் தரம்: தீபா, கோவை: வந்தே பாரத் ரயிலில் சென்னை சென்று சேர்ந்ததே தெரியவில்லை. எப்படி ஏறினோமோ, அப்படியே காரில் சென்றதைப்போல ஃபிரஷ்ஷாக சென்று இறங்கினோம். திருமணங்கள் போன்ற விசேஷங்கள், சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்வோர், அவசர வேலையாக செல்வோர், வர்த்தகர்கள் போன்றோருக்கு இந்த ரயில் உதவியாக இருக்கும். உணவு பரிமாறுவோர் நன்றாக பரிமாறினர். சாம்பார் சரியில்லை. கழிப்பிட வசதி போன்றவை நன்றாக இருந்தது. அளவான நிறுத்தங்களே அளிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பயணம் பாதுகாப்பான உணர்வை தந்தது. இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகளிடம் இருந்து கருத்துகள் வந்துள்ளன. அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றபடி பெரிய குறைகள் எதையும் பயணிகள் தெரிவிக்கவில்லை” என்றனர்.