

திருப்பூர்/கோவை: கோவை மற்றும் திருப்பூரில் கரோனாவுக்கு இருவர் உயிரிழந்தனர். கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் நேரு நகரை சேர்ந்த 62 வயது பெண், கடந்த மாதம் 23-ம்தேதி பக்க வாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனிடையே. இறந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுகாதார துறை சார்பில் நேரு நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதியில் 70-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. கடந்த 30-ம் தேதி அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது” என்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் 55 வயது பெண்ணும், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த 82 வயது முதியவரும் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். கடந்த ஒரு வாரத்துக்குள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.