பைக் டாக்சி வழிகாட்டு நெறிமுறைகள்: அரசு ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு
சென்னை: பைக் டாக்சிகளுக்காக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: பன்னாட்டு பெரு நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் பைக் டாக்சிகள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அதே நேரம் போதிய பாதுகாப்புடன் இந்நிறுவனங்கள் செயல்படுவதாகக் கூறினாலும், வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டியது அவசியம்.
இணையவழியில் முழுமையாக இந்நிறுவனங்கள் இயங்குவதால், அவற்றைக் கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது. டாக்சி இயக்கத்தின்போது பிரச்சினை நேர்ந்தால், இதுகுறித்த விசாரணைக்கு நிறுவன பிரதிநிதிகளை அழைப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் நாடு முழுமைக்கும் சேர்ந்து ஓரிரு முக்கிய நகரங்களில் மட்டுமே பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களும் பிற மாநிலங்களில் இருப்பதால் நமது மாநில சட்ட திட்டங்கள் அவர்களைக் கட்டுப்படுத்தாது.
மேலும், அரசு வழிகாட்டுதலின் கீழ் நிறுவனங்கள் இயங்கும்போது அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு இருக்கும். இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு பைக் டாக்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனை அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளோம். விரைவில் ஒப்புதல் வழங்கியதுடன் பைக் டாக்சிகளை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என்றனர்.
