"என்ன உதவி வேண்டுமானாலும் பிரதமர் கேட்கச் சொன்னார்" - பெள்ளி நெகிழ்ச்சி

"என்ன உதவி வேண்டுமானாலும் பிரதமர் கேட்கச் சொன்னார்" - பெள்ளி நெகிழ்ச்சி
Updated on
1 min read

முதுமலை: "என்ன உதவி வேண்டுமானாலும் பிரதமர் கேட்கச் சொன்னார்" என பெள்ளி தெரிவித்தார்.

புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வந்தார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து சுமார் 20 கி.மீ., தூரம் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக முதுமலை வந்தார். முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமுக்கு வந்தார். பின்னர், பிரதமர் மோடி ஆஸ்கர் விருது பெற்ற யானைகள் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து பாராட்டினார்.

தெப்பக்காட்டில் வளர்ப்பு யானை முகாமில் குட்டி யானைகள் ரகு மற்றும் பொம்மிக்கு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினருடன் உணவு ஊட்டினார். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு கொடுத்து, யானைகளை தடவிக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது யானைகள் துதிக்கை உயர்த்தி மோடிக்கு நன்றி தெரிவித்தன. பின்னர் காரில் புறப்பட்டு மசினகுடியில் அமைக்கப்பட்ட ஹெலிபேடுக்குச் சென்றார்.

என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கச் சொன்னார்: பிரதமரின் சந்திப்பு குறித்து பெள்ளி கூறும்போது, ''பிரதமர் எங்களின் பணியை பாராட்டினார். யானைகளை நாங்கள் வளர்த்த விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், எங்கள் இருவரையும் டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். எங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கச் சொன்னார். நாங்கள் எங்கள் பகுதிக்கு பள்ளிக்கூடம் மற்றும் சாலை வசதியும் வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in