

சென்னை: "கலாஷேத்ரா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டுமின்றி, மொத்த மாணவிகளும் வீதியில் வந்து போராடியுள்ளனர். அந்தப் போராட்டத்தில் உண்மை இல்லாமல், மாணவிகள் வீதிக்கு வரவேண்டியது இல்லை. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அப்படியென்றால், அங்கு ஏதோ நடந்திருக்கிறது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், பிரதமரின் சென்னை வருகை மற்றும் திட்டங்கள் தொடக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பிரதமரிடம் ஜிஎஸ்டியை நீக்கும்படி சொல்லுங்கள். வரி கட்டி எங்களால் வாழ முடியவில்லை. வீடு கட்ட முடியவில்லை. கம்பிக்கு, செங்கல், சாந்து, சுண்ணாம்புக்கு வரியென்று அனைத்துக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. ஏர்போர்ட் திறப்பது, வந்தே பாரத், எத்தனை காலமாக பாரத் வந்து கொண்டிருக்கிறது. கோவைக்கும் சென்னைக்கும் ஏற்கெனவே ரயில்கள் இருக்கின்றன. அதை ஏதோ நவீனப்படுத்தி திறப்பதாகக்கூறி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் சாதனையா?
ஒரு சாதனை என்றால், நாட்டின் குடிமக்களுக்கு ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இல்லாத சரியான, சமமான தரமான கல்வி, மருத்துவம், தூய குடிநீர், பயணிக்க சரியான பாதை ஆகியவற்றை செய்துதர வேண்டும். முதலில் சுங்கக் கட்டணத்தை நிறுத்தச் சொல்லுங்கள். ஏற்கெனவே காருக்கான சாலை வரி செலுத்தியது, எந்த சாலையில் பயணிப்பதற்கு என்றே தெரியவில்லை. அவற்றையெல்லாம் பிரதமரிடம் கூறி முதலில் சரிசெய்ய சொல்லுங்கள்" என்றார்.
அப்போது அவரிடம், கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றம் செய்திருக்கிறார்கள் என்றால், அதற்கு ஆதரவளிக்கும் எதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டுமின்றி, மொத்த மாணவிகளும் வீதியில் வந்து போராடியுள்ளனர்.
அந்தப் போராட்டத்தில் உண்மை இல்லாமல், மாணவிகள் வீதிக்கு வரவேண்டியது இல்லை. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் அவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். அப்படியென்றால், அங்கு ஏதோ நடந்திருக்கிறது. அப்படி நடந்திருக்கிறது என்றால், யாரால், என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை அரசு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை" என்று அவர் கூறினார்.