

முதுமலை: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற 'எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு பொன் விழா, நாடு முழுவதிலும் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று பந்திப்பூர், முதுமலை வந்தார். பந்திபூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வாகனம் மூலம் முதுமலை வந்தார்.
முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில் வளர்ப்பு யானைகளைப் பார்வையிட்ட மோடி ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் சிறிது நேரம் பேசினார். மேலும் அந்த ஆவணப் படத்தில் நடித்த ரகு என்ற யானையும் மோடி சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பொம்மி மற்றும் ரகுவுடன் அற்புதமான பொம்மனையும் பெல்லியையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. முதுமலையில் கம்பீரமான யானைகளையும் சந்தித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தெப்பக்காடு யானைகள் முகாமை பார்வையிட்ட பிறகு மோடி மைசூரு புறப்பட்டு சென்றார்.
யார் இந்த பொம்மன்? நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியைச் சேர்ந்தவர் பொம்மன் (52). பழங்குடியினத்தைச் சேர்ந்தவரான இவர் வனத்துறையில் 1984-ம் ஆண்டு முதல் யானைப் பாகனாக பணியாற்றி வருகிறார். வனத்துறை வழிகாட்டுதல்படி முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் யானைகள் பராமரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முதுமலை முகாமிற்கு வரும் யானை குட்டிகள், உடல் நலம் பாதித்த யானைகள் என பலதரப்பட்ட யானைகளை பராமரித்த நீண்ட அனுபவம் மிக்கவர் பொம்மன். இவரது தந்தை, தாத்தா ஆகியோரும் யானைப் பாகன்கள்தான்.
யானை பராமரிப்பில் சுமார் 40 ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் பொம்மன் சிலமுறை யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வந்தவர். இவரது மனைவி பெள்ளியும் யானைகள் பராமரிப்பில் பொம்மனுடன் தொடர்ந்து பயணிப்பவர்.