புதுச்சேரியில் நள்ளிரவில் ரெஸ்டோபார் திறப்பு | அனுமதியை  ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: அதிமுக அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவில் ரெஸ்டோபார் திறக்கும் அனுமதியை முதல்வர், ஆளுநர் ஆகியோர் ரத்து செய்யாமல் இதே நிலை நீடித்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று கூட்டணிக்கட்சியான அதிமுக அறிவித்துள்ளது.

புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரி மாநிலம் முழுக்க இரவு நேர மதுபான பார்கள் மற்றும் ரெஸ்டோ பார்கள், கடைகள் திறந்திருப்பதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. இரவு நேரத்தில் 2 மணி வரை திறந்திருப்பதால் இளம் பெண்கள், இளைஞர்கள் மதுபோதைக்கும், கஞ்சாவுக்கும் சர்வசாதாரணமாக அடிமையாகி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2.30 மணியளவில் மது அருந்திய 5 பேர், சாலையில் பைக்கில் சென்ற ஒரு இளைஞரை இழுக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டு அந்த இளைஞர் உயிரிழந்தார்.

வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளால் புதுச்சேரி மாநில மக்களை பாதுகாக்க முடியாத சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது. வருமானத்துக்காக இரவு நேரங்களில் கடை வைத்துக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு முழுவதுமாக சீரழிந்துள்ளது. அண்டை மாநிலத்தில் இருந்து விதவிதமான போதைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கேந்திரமாக புதுச்சேரி மாறியுள்ளது. முதல்வர் ரங்கசாமி இதுபோன்ற செயல்களை அனுமதிக்கலாமா? இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டணியில் இருப்பதால் இதுபோன்ற அநாகரீகமாக நடத்தப்படும் பார்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என நாங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை வைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலம் ஒரு கலாச்சார சீரழிவு மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இந்திய அளவில் தங்கு தடையின்றி போதை பொருள் விற்பனையாகும் மாநிலமாக புதுச்சேரி திகழும் என்பதில் ஐயமில்லை. எனவே முதல்வர் ரங்கசாமி இரவு நேரத்தில் ரெஸ்டோபார், கலாச்சார சீரழிவு நடப்பவைகளை ரத்து செய்ய வேண்டும்.துணைநிலை ஆளுநர் தமிழிசை தனக்குள்ள பொறுப்பும், கடமைகளையும் உணர்ந்து இதுபோன்ற கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றின் அனுமதியை துணைநிலை ஆளுநர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மாநில எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை சீரழியாமல் தடுக்க கட்சித்தலைமை அனுமதி பெற்று மக்களை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும் என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in