தமிழகத்தின் வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியம்: சென்னையில் பிரதமர் மோடி உறுதி

விழாவில் பேசும் பிரதமர் மோடி.
விழாவில் பேசும் பிரதமர் மோடி.
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6 ஆயிரம் கோடியும், சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு 6 மடங்கு அதாவது ரூ.8,200 கோடி வரையும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் விளையாட்டு மைதானத்தில், மத்திய அரசின் சாலை, ரயில் போக்குவரத்து துறைகள் சார்பில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

தமிழகத்துக்கு வருவது எப்போதும் பெருமை தருவதாக உள்ளது. வரலாறு மற்றும் பாரம்பரியத்தின் தாய்வீடாகவும், மொழி, இலக்கியத்தின் விளைநிலமாகவும். தேசபக்தி மற்றும் தேசிய உணர்வின் மையமாகவும் தமிழகம் திகழ்கிறது. பல சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்புக்காக மட்டும் இந்த ஆண்டில்ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-ல் ஒதுக்கியதைவிட 5 மடங்கு அதிகமாகும். அதே போல, ரயில்வே கட்டமைப்புக்கும் இதுவரை இல்லாத சாதனை அளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 600 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆண்டுக்கு 4,000 கி.மீ. மின்மயமாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2014-ல் 74 விமானநிலையங்கள் இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்காக அதாவது 150 விமான நிலையங்கள் உருவாகியுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தை ஒப்பிடும் போது, துறைமுகங்களின் மேம்பாடும் 2 மடங்காகியுள்ளது.

கடந்த 2014-ல் 318 மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் இருந்தன. தற்போது 660 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எண்ணிக்கை 3 மடங்காகியுள்ளது.

சாலை வழித் திட்டங்களில் ஒன்றான விருதுநகர் - தென்காசி, பருத்தி விவசாயிகளை இணைக்கிறது. சென்னை - கோவை வந்தே பாரத்ரயில், சிறு தொழில்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது. சென்னை விமான நிலைய புதியமுனையம் உலகத்தை தமிழகத்துக்கு கொண்டு வருகிறது. இது இளைஞர்களுக்கு வருவாய் வாய்ப்புகளை வழங்குகிறது. முதலீடுகளையும் அதிக அளவில் கொண்டு வருகிறது.

தமிழக வளர்ச்சி என்பது எங்களுக்கு மிகவும் முக்கியம். அதற்குமிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறோம். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-14-ம் ஆண்டுகளில் இது ஆண்டுக்கு ரூ.900 கோடிக்கும் குறைவாகவே இருந்தது.

2004-14-ல் தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 800 கி.மீ.ஆக இருந்த நிலையில், 2014-23-ல் 2ஆயிரம் கி.மீ. சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2014-15ல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, பராமரிப்பு திட்டங்களுக்காக ரூ.1,200 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில், 2022-23-ல்6 மடங்கு அதிகரித்து ரூ.8,200 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பல முக்கிய திட்டங்களை தமிழகம் கண்டுள்ளது. பாதுகாப்பு தொழில் வழித்தட திட்டம் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. பி.எம்.மித்ரா மெகாஜவுளி பூங்கா திட்டம் தமிழக ஜவுளித் துறைக்கு மிகவும் சாதகமாக அமையும்.

கடந்த ஆண்டு, பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரம் - கன்னியாகுமரி சாலை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற வளர்ச்சியை முன்னெடுக்கும் பல திட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இன்று மேலும் சில திட்டங்கள்தொடங்கப்பட்டும், அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன.

குறிப்பாக, சென்னை, மதுரை,கோயம்புத்தூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்கள் இந்த புதியதிட்டங்கள் மூலம் நேரடியாக பயன்பெறுகின்றன. சென்னை - கோவை வந்தே பாரத் ரயில், தமிழக இளைஞர்களிடம் பிரபலமடைந்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கருத்து, வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பூமியில் இயல்பானதுதானே. இந்த நவீன இணைப்பு ஜவுளி, குறு, சிறு தொழில் முனையமான கோவையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும். சென்னையில் இருந்து 6 மணிநேரத்தில் கோவைக்கு வந்தே பாரத் ரயில் செல்லும், இதன்மூலம் ஜவுளி, தொழில் மையங்களான சேலம், ஈரோடு, திருப்பூருக்கும் பயன்தரும்.

தமிழகத்தின் கலாச்சார தலைநகராகவும், உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகவும்மதுரை விளங்குகிறது. தற்போதைய திட்டங்களால் மதுரை மாநகரம் பெரிதும் பயன்பெறும். தமிழகம் இன்று வளர்ச்சி இன்ஜின்களில் ஒன்றாக உள்ளது. கட்டமைப்பு, வேலைவாய்ப்பை உருவாக்கும்போது வருவாய் அதிகரித்து, தமிழகம் வளர்கிறது. தமிழகம் வளர்வதால், இந்தியாவும் வளர்கிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in