

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அவர்களுக்குச் சொந்தமான இடங்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
முறைகேடு குற்றச்சாட்டு: இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி மீது, அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
2017 முதல் 2021 வரை பழனிசாமி தமிழக முதல்வராகவும், பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தார். அப்போது, நீலகிரி, விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இந்த கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டதாகவும், விதிமீறல்கள் இருப்பதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் என்ற முறையில், பழனிசாமி இந்தகட்டிடப் பணிகளுக்கு ஒப்புதல்அளித்ததாகவும், பல முறைகேடுகள் இருப்பதாகவும் கூறி, பழனிசாமியிடம் விசாரணை நடத்தக் கோரி, தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அனுமதி கோரி யிருந்தது.
ஆதாரங்கள் ஆய்வு: இதையடுத்து, பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்த தமிழக அரசு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்கி உள் ளது.
விரைவில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார், பழனிசாமியிடம் முதல்கட்ட விசாரணையைத் தொடங்குவர் என்றும், அதில் ஆதாரங்கள் கிடைத்தால், அதனடிப்படையில் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய் யப்படும் என்றும் தெரிகிறது.
தமாகா கண்டனம்: இந்நிலையில், பழனிசாமி மீதுலஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழனிசாமி மீது விசாரணை நடத்ததமிழக அரசு அனுமதி அளித்துள் ளதை தமாகா கண்டிக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்களிடம் திமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், பழனிசாமி தலைமையிலான அதிமுக, மக்கள் மத்தியில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.