Published : 09 Apr 2023 04:05 AM
Last Updated : 09 Apr 2023 04:05 AM
சென்னை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் அண்மையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது எனவும், மசோதா நிலுவையில் இருந்தால் நிராகரிப்பதாகவே பொருள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துமக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் கண்ணியத்துக்குரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்களிடையே பேசும்போது அந்த கண்ணியம் பற்றிய கவலை சிறிதுமின்றி பேசியுள்ளார்.
ஆளுநர் விளக்க வேண்டும்: குறிப்பாக. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், வெளிநாட்டு நிதியால்தான் கட்டமைக்கப்பட்டது என்று ஆளுநர் கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவர் கூறிய தகவல் உண்மையாக இருக்குமானால், மத்திய உள்துறையிடம் புகார் செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதுதானே?
இது தொடர்பான தகவல்களை, விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு பகிர்ந்துள்ளாரா என்பதை ஆளுநர் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளில் அமரப்போகும் மாணவர்கள் மத்தியில் இப்படிப் பேசுவது, மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடுவோர் குறித்த எதிர்மறைப் பிம்பத்தைக் கட்டமைத்துவிடும்.
தனிப்பட்ட முறையில் தனக்குத் தோன்றியதை எல்லாம் பொதுவெளியில் பேசுவதை இனியாவது ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறவழியில் போராடும் மக்கள்மீது சேற்றை வாரி இறைக்கும் வகையிலும், மக்கள் உணர்வுகளை மதிக்காமலும் ஆளுநர் பேசியிருப்பதைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT