

சென்னை: டெல்டா பகுதிகளில் 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பபெற்றதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: காவிரி டெல்டா விவசாயிகளின் நலனுக்காக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், அண்மையில் அங்குநிலக்கரி சுரங்கம் அமைக்க மத்தியஅரசு அறிவிப்பாணை வெளியிட்டது. தூங்கிக் கொண்டிருந்த, காலங்கடந்து எதிர்ப்பு தெரிவித்ததிமுக அரசின் கவனத்தை ஈர்க்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததுடன், நாடாளுமன்றத்திலும் அதிமுக கவன ஈர்ப்புதீர்மானம் கொண்டுவந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சர், தமிழ்நாட்டில் புதிதாக சுரங்கம் தோண்டும் பணியைக் கைவிடுவதாக அறிவித்துள்ளார். இது, அதிமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதற்காக பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரிசுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தை பாலைவனமாக்கும் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தேமுதிகவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. சட்டப்பேரவையிலும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக தமிழகடெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசுஅறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (ட்விட்டர் பதிவு): மத்தியஅமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த 3 நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி: டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு வெற்றியை தேடித்தந்த முதல்வருக்கு நன்றி. மாநில அரசுகளின் ஒத்திசைவு இல்லாமல் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தக்கூடாது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில் டெல்டா மண்டலத்தை உறுதியோடு பாதுகாக்கும் வகையில் நிலக்கரி சுரங்கத் திட்டம் ரத்து என்று மத்திய அரசுஅறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
பாமக தலைவர் அன்புமணி: தமிழக மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய நிலக்கரி திட்டங்களை ஏலப் பட்டியலில் இருந்து நீக்க அறிவுறுத்தியிருப்பதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். இதுபோல என்எல்சிமூன்றாம் சுரங்கம், வீராணம்நிலக்கரி திட்டம், பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் ஆகியவற்றின் பெரும்பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்தான் வருகிறது. எனவே, இவற்றையும் ரத்து செய்ய வேண்டும்.
வி.கே.சசிகலா: தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலை வர் கே. வீ. இளங்கீரன்: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில், மத்திய அரசு தற்போது இத்திட்டத்தினை ரத்து செய்துள்ளது.
இதற்காக முழுமூச்சுடன் செயலாற்றிய, காவிரி டெல்டா பகுதி பாலைவனமாவதை தடுத்து நிறுத்தி தானும் டெல்டாகாரன் என்பதனை நிரூபித்த முதல்வர் ஸ்டாலினுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கும் டெல்டா விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவர் வ.சேதுராமன்: இந்த விஷயத்தில் மிகக்குறுகிய காலத்தில் மாநில அரசு விரைவாக செயல்பட்டதை பார்க்கிறோம். முதல்வர் விரைவாக செயல்பட்டுள்ளார். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இத்திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று தெரிவித்தார். அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தது வரவேற்கத்தக்கது. மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி.
மேலும், மத்திய அரசின் அறிவிப்புக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் நன்றி தெரிவித்துள்ளார்.