Published : 09 Apr 2023 04:00 AM
Last Updated : 09 Apr 2023 04:00 AM

அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்தால் சமுதாயம் முன்னேறும்: ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி நம்பிக்கை

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் `புனித மூவர்' நூலை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. உடன், ஆளுநர் ஆர்.என்.ரவி, ராமகிருஷ்ணா மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தா, மத்திய இணை அமைச்சர்எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு.

சென்னை: அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேறும் என்று ராம கிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு நேற்றுவந்த பிரதமர் மோடி, மெரினாகடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார். அங்கு விவேகானந்தர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய பிரதமருக்கு, ராமகிருஷ்ண மடம் சார்பில் விவேகானந்தர் சிலை பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரதமர் பேசியதாவது: `ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்ற நோக்கத்தில்தான் ராமகிருஷ்ண மடங்கள் சேவையாற்றி வருகின்றன. ஒரே பாரதம் என்பதை, அண்மையில் காசி தமிழ்ச் சங்கமத்தில் பார்த்தேன். இப்போது சவுராஷ்டிரா தமிழ்ச்சங்கமம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எங்களது அரசின் கொள்கைகள், விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவை.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பதன் மூலம் சமுதாயம் முன்னேறும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படவில்லை. இப்போது அனைவருக்கும் சமையல் எரிவாயு, கழிப்பறை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவை செய்து கொடுக்கப் படுகின்றன. முத்ரா யோஜனா திட்டம் 8-வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் ஏராளமான சிறு தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. முன்பெல்லாம் வங்கிகளில் செல்வந்தர்கள் மட்டுமே கடன்பெறும் நிலை இருந்தது. அதை நாம் இப்போது மாற்றியுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில், சென்னை ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் கவுதமானந்தா, பேளூர் ராமகிருஷ்ண மடத்தின் அறங்காவலர் முக்தியானந்தா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, விவேகானந்தர் இல்லத்தில் தியானம் செய்யும் இடத்தில் சுமார் 10 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி தியானம் செய்தார் என்று ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x