Published : 09 Apr 2023 04:00 AM
Last Updated : 09 Apr 2023 04:00 AM
சென்னை: மாநிலங்களின் நிதி தேவைகளையும், திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றவிழாவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, திருத்துறை பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையிலான ரயில் பாதையைத் திறந்துவைத்து, தாம்பரம்- செங்கோட்டை இடையிலான அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைத்தார். மேலும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்களை தொடங்கி வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி.
மாநிலங்களின் மேம்பாட்டுக்குத் தேவையான திட்டங்களை மத்தியஅரசு தொடர்ந்து நிறைவேற்றினால்தான், ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான சாலை கட்டமைப்புத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, சென்னை-மதுரவாயல் உயர்நிலைச் சாலை, சென்னை-தாம்பரம் உயர்நிலைச் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலையை நான்கு வழிச் சாலையாக்குதல், சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் நெடுஞ்சாலை, சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மாற்றுதல் உள்ளிட்ட திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.
பிரதமர் தொடங்கிவைத்துள்ள 'வந்தே பாரத்' ரயில் சேவை, தமிழகத்தின் மேற்குப் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதேபோல, சென்னை- மதுரை இடையே'வந்தே பாரத்' ரயில் சேவையைத் தொடங்க வேண்டும். மேலும், அனைவரும் பயணிக்க உதவும் வகையில், ‘வந்தே பாரத்’ ரயில் டிக்கெட் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்: தமிழகத்தின் அடுத்தகட்டப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
இது தவிர, கோவை, மதுரை,திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்காக மாநில அரசால் ரூ.1,894 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சென்னையில் மெட்ரோ ரயில்திட்டத்தின் 2-வது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்கை வழங்குவதற்கான ஒப்புதல் கடந்த 2 ஆண்டாக நிலுவையிலே உள்ளது. அதை காலதாமதமின்றி நிறைவேற்றித் தர வேண்டும்.
தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கருத்துரு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளது. இவற்றுக்கும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே, மாநிலங்களின் நிதி தேவைகளையும், திட்டங்களையும் நிறைவேற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் என்பதால், எனது கோரிக்கையை அவர் உணர்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பிரதமரிடம் மனு: நிகழ்ச்சி முடிந்து, சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர்மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆகியோர் சந்தித்து, தமிழக திட்டங்கள் தொடர்பான மனுவை அளித்தனர். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சில நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி, அங்கிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT