Published : 07 Sep 2017 09:03 AM
Last Updated : 07 Sep 2017 09:03 AM

முதல்வரின் உறுதிமொழியை ஏற்று பெரும்பாலான அமைப்புகள் போராட்டத்தை தள்ளிவைத்தன: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் பிளவு

அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பில் பிளவு ஏற்பட்டுள்ளது. முதல்வரின் வாக்குறுதியை ஏற்று பெரும்பாலான அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளன. ஒருசில அமைப்பினர் மட்டும் திட்டமிட்டபடி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றுமுதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று ஈரோடு சென்ற முதல்வர் பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.கணேசன், பெ.இளங்கோவன் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது முதல்வர் பழனிசாமி, ஊதியக்குழு அறிக்கை செப்டம்பர் இறுதிக்குள் கிடைத்ததும் புதிய ஊதிய விகிதம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும். சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய புதிதாக அமைக்கப்பட்டுள்ள டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழுவின் அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் எனவே அதுவரை பொறுமை காக்குமாறு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இடம்பெற்றுள்ள சங்கங்களின் நிர்வாகிகள் ஈரோட்டில் ஆலோசனை நடத்தினர். முதல்வர் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று பெரும்பாலான அமைப்புகள் யோசனை தெரிவித்தன. அதேநேரத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏதும் அளிக்கப்படாததால் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கூறியது.

கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மாயன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கோரிக்கை ஏற்கப்படாததால் திட்டமிட்டபடி 7-ம் தேதி (இன்று) முதல் தொடர் போராட்டம் நடைபெறும்” என்றனர்.

அதேநேரத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களான பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர், “முதல்வரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளோம்” என்றனர். இதையடுத்து ஜாக்டோ-ஜியோவில் பிளவு ஏற்பட்டது உறுதியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x