Published : 13 Sep 2017 08:18 AM
Last Updated : 13 Sep 2017 08:18 AM

பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதல்வர்-ஓபிஎஸ் தேர்தலை சந்திக்க தயாரா?- மதுரையில் தினகரன் ஆவேசம்

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகி விட்டேன் என்று மதுரையில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் (அம்மா அணி) தினகரன் கூறினார்.

சென்னை வானகரத்தில் நேற்று காலை நடந்த அதிமுக (முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் அணி) பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு, மதுரையில் செய்தியாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொதுச் செயலாளரின் கையெழுத்தோடு தான் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும் என்பது விதி. சென்னையில் நடந்தது பொதுக்குழு இல்லை. ஓபிஎஸ் - பழனிசாமியால் நடத்தப்பட்டது பொதுக்கூட்டம்தான். அதில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அதற்கு சட்டரீதியான அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தயாராகி விட்டேன். இந்த ஆட்சி நீடித்தால் கட்சிக்குத்தான் கெட்டப் பெயர் ஏற்படும். அதனால், கட்சியைக் காப்பாற்ற எந்த ஒரு முடிவையும் எடுக்கத் தயங்க மாட்டேன். ஆளுநரை சந்தித்து, எங்களது முடிவைத் தெரிவித்து விட்டோம். நல்ல முடிவெடுப்பதாக அவர் உறுதி அளித்தார். ஒரு வாரம் பொறுத்திருப்போம். சாதகமான முடிவு வரவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம்.

ஆனால், ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல தயங்குகிறார். தனக்கு பெரும்பான்மை உள்ளது என்றால் மெஜாரிட்டியை நிரூபிக்க பழனிசாமி ஏன் பயப்படுகிறார்?

ஒரு சில அமைச்சர்கள் ஆட்சியைக் கவிழ்க்க, திமுகவுடன் கைகோர்த்து செயல்படுவதாக திசை திருப்புகிறார்கள். அவர்களுக்கு தேர்தலை சந்திக்க பயம். முதல்வர் பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா? தற்போது இவர்கள் கூட்டிய பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பல எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் முழுமனதோடு செல்லவில்லை. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால், அவர்கள் தானாக எங்கள் பக்கம் வந்துவிடுவர் என்றார்.

விரைவில் நிஜ பொதுக்குழு

மன்னார்குடியில் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று கூறியபோது, ‘‘சசிகலாதான் உண்மையான பொதுச் செயலாளர். அவரிடம் அனுமதி பெற்று விரைவில் உண்மையான பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x