Published : 09 Apr 2023 02:59 PM
Last Updated : 09 Apr 2023 02:59 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் மாலை ரத உற்சவ தீமிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவின் போது வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி ஒரு சமூகத்தை சேர்ந்த மேல்பாதி பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேல்பாதி கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பான அமைதிக் கூட்டம் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் டிஎஸ்பி பார்த்திபன், வட்டாட்சியர் வேல்முருகன், வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் லட்சாதிபதி மற்றும் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அப்போது, மறியலில் ஈடுபட்ட தரப்பினர் கூறுகையில், “தங்களை கோயிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றனர். அதற்கு மற்றொரு தரப்பினர் கூறும்போது, “நாங்கள் யாரையும் தடுக்கவில்லை. ஒரு சிலர் வேண்டுமென்றே வீண் பிரச்சினை செய்கின்றனர்” என குற்றம் சாட்டினர். இதையடுத்து, இரு தரப்பினரும் கோயி லுக்குள் செல்லலாம்.
யார் வந்தாலும் அவர் களை தடுக்கக் கூடாது. ஏற்கெனவே நடந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு இல்லாமலும், ஒருவருக்கொருவர் பிரச்சினையின்றியும் சமாதானமாக செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டனர். ஆனால் மற்றொரு தரப்பினர்,
இது பற்றி விழாக் குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக கூறிவிட்டு கையெழுத்திடாமல் சென்றனர். இதனால் இந்த அமைதிக் கூட்டத்தில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து மேல்பாதி கிராமத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி போலீஸாருக்கும், வட்டாட்சியருக்கும் கோட்டாட்சியர் ரவிச் சந்திரன் அறிவுறுத்தினார். அதன்படி மேல்பாதி கிராமத்தில் டிஎஸ்பி பார்த்திபன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT