Published : 09 Apr 2023 03:42 PM
Last Updated : 09 Apr 2023 03:42 PM

தமிழகத்தின் நீண்ட மேம்பாலம் என்ற பெருமையுடன் மதுரை - நத்தம் புதிய மேம்பாலத்தில் உற்சாகமாக பயணித்த பொதுமக்கள்

மதுரை: மதுரை - நத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள 7.3 கி.மீ. நீள மேம்பாலத்தை நேற்று பிரதமர் காணொலி மூலம் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, மாலை 6.47 மணிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பாலத்தின் வழியே மக்கள் உற்சாகமாக பயணித்தனர்.

மதுரை - நத்தம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நகர் பகுதியில் சொக்கி குளத்தில் இருந்து ஊமச்சிகுளத்தை அடுத்த மாரணி வரை 7.3 கிமீ தூரத்தில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டது. பாலம் இருவழியாகவும், கீழே இரு வழியாகவும் புதிய வடிவில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நத்தத்திலிருந்து துவரங்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு விட்டது. ஊமச்சிகுளத்திலிருந்து நத்தம் வரையிலான 4 வழிச்சாலையில் இன்னும் சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கிவைத்த பிரதமர் ரூ.613 கோடியில் கட்டப்பட்ட, மதுரை- நத்தம் சாலை மேம்பாலத்தையும், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் காணொலி மூலம் திறந்துவைத்தார்.

பிரதமர் பாலத்தை திறந்ததும் பொதுமக்களின் வாகனங்களை மேம்பாலத்தில் அனுமதிக்கும் வகையில், மதுரையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சொக்கிகுளம் அருகே பாலம் தொடங்கும் இடத்தில் கரும்பு, வாழை மரங்களால் பசுமை தோரண வாயிலை அமைத்திருந்தனர். மாலை 6.47 மணிக்கு பாலத்தை திறந்து வைத்ததும் பொதுமக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் கட்சி நிர்வாகி களுடன் முதல் வாகனமாக பயணித்தார். ஏராளமான பாஜகவினர் வாகனங்களில் அணிவகுத்து சென்று, பிரதமரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பி பூக்களை தூவியபடி ஊமச்சிகுளம் வரை பயணித்தனர் அவர்களது வாகனங்களை தொடர்ந்து பொது மக்களின் வாகனங்கள் பயணித்தன.

சொக்கி குளத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட அதே நேரத்தில், நத்தம் மார்க்கத்திலிருந்து வந்த வாகனங்கள் மாரணியில் பாலத்தில் ஏற அனுமதிக்கப்பட்டன. இந்த வாகனங்கள் 10 நிமிடங்களுக்குள் தல்லாகுளம், மாநகராட்சி பிரதான நுழைவு வாயிலை அடைந்தன. சொக்கிகுளம் விஷால் டி மால் அருகே பாலத்தில் ஏறவும், ஊமச்சிகுளம் பகுதியிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் தல்லா குளத்திலும், மாநகராட்சி பிரதான வாயில் என 2 சாலைகளில் இறங்கவும் இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கேற்ப தல்லாகுளம், அவுட்போஸ்ட்டில் போக்குவரத்து மாற்றங்கள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன. நத்தம் வரை நிலுவையில் உள்ள சாலைப் பணிகளை விரைந்து முடித்தால், மதுரையிலிருந்து திருச்சி, சென்னை செல்லும் 90 சதவீத பயணிகள் இந்த மேம்பாலம் வழியாகவே பயணிப்பர். நத்தம் மட்டுமின்றி திண்டுக்கல், அலங்காநல்லூர், அழகர்கோவில் என நகரின் வடபகுதியிலுள்ள பல இடங்களுக்கு செல்ல இந்த மேம்பாலம் முக்கிய இணைப்பாக அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x