Published : 16 Sep 2017 11:04 AM
Last Updated : 16 Sep 2017 11:04 AM

‘யாதும் தமிழே’ இரண்டாம் நாள் நிகழ்ச்சி மங்கள இசையுடன் தொடங்கியது

'தி இந்து' தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கநாளை கொண்டாடும் வகையில் ‘யாதும் தமிழே’ என்ற பெயரில் 2 நாள் நிகழ்ச்சி இன்று காலை நாதஸ்வர தவில் கலைஞர்களின் மங்கள இசையுடன் தொடங்கியது.

‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், செப்டம்பர் 16-ம் தேதியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக ‘யாதும் தமிழே’ என்ற பெயரில் 2 நாள் விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நேற்று தொடங்கியது.

முதல்நாள்நிகழ்ச்சியில்..

முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் கலை, இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், ஆய்வு ஆகிய துறைகளில் சிறந்த ஆளுமைகளுக்கு 2017-ம் ஆண்டின் ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து சிறப்புரையாற்ற்றினார். நடிகர் கமல்ஹாசன் விருதுகளை வழங்கிப் பேசினார்.

இதையடுத்து ‘தமிழ் நிலத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.. நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து வாசகர்களின் கேள்விகளுக்கு கமல்ஹாசன் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணமாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்தார்.

2-ம் நாள் நிகழ்ச்சியில்..

இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மயிலை வெங்கடேசன் தலைமையில் மயிலை வரமூர்த்தி, மயிலை ரமேஷ், ராமு ஆகியோர் உட்பட 30 நாதஸ்வர கலைஞர்கள் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தேசபக்தி பாடல்கள் இசைத்து கலைஞர்கள் ரசிகர்களை மகிழ்வித்தனர்.

அதை தொடர்ந்து புத்தர் கலைக்குழு சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், பறை ஆட்டமும் நடைபெற்றது. தலைமுறைகள் பேசும் தமிழ்’ என்ற தலைப்பில் கவிஞர்கள் வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோர் கலந்துரையாடுகின்றனர்.

அதையடுத்து ‘எவ்வழி செல்லும் நம் மொழி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. எழுத்தாளர் சா.கந்தசாமி நெறியாள்கை செய்கிறார். சென்னை பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பாரதி ஹரிசங்கர், இரா.துரைப்பாண்டி, ஸ்ரீமதி கேசன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் எஸ்.குருசங்கர், திரைப்பட இயக்குநர் ராம் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

பிற்பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ‘ஊர்கா’ இசைக்குழுவின் ‘ராக் தாளம் பல்லவி’ இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

3.45 முதல் 4.30 வரை ‘கற்றுக் கொண்டார்கள் பற்று கொண்டார்கள்’ என்ற தலைப்பில் ‘புட் சட்னி’ ராஜ்மோகன் பேசுகிறார்.

4.45 முதல் 5.30 வரை ‘தியேட்டர்காரன்’ நாடகக் குழுவினரின் ‘ப்ரோ, கொஞ்சம் தமிழ்ல பேசுங்க’ நாடகம் இடம் பெறுகிறது.

மாலை 5.45 முதல் 6.30 வரை ‘ஏனுங்க தம்மாதுண்டு தமிழ்ல பேசுங்கன்னா’ என்கிற நிகழ்ச்சியை தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் ஜெகன் நடத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x