Published : 08 Apr 2023 07:08 AM
Last Updated : 08 Apr 2023 07:08 AM

தமிழகத்திலிருந்து ஆளுநரை வெளியேற்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: திருமாவளவன், கி.வீரமணி, சீமான் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநரை வெளியேற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், திக தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவாக தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் குடிமைப் பணிதேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

திருமாவளவன்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மதிக்கத் தயாராக இல்லை. இது மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானப் போக்காகும். அதிகார மமதை அவரது பேச்சில் வெளிப்படுகிறது. இவர் ஆர்.என்.ரவி அல்ல, ஆர்எஸ்எஸ் ரவி என்பதை மறுபடியும் உறுதிபடுத்தியிருக்கிறார். எனவே, ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்த வேண்டும். இது திமுகவுக்கு விடுத்த பெரிய சவாலாகும்.

கி.வீரமணி: ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுகள் ஆணவத்தின் உச்சமாகும். மசோதாக்களை நிறுத்திவைத்தால், அவற்றை நிராகரித்தது என்றே பொருள் என்று அவர் கூறியிருப்பது, அவரது முரண்பட்ட நடத்தைக்கு உதாரணமாகும். அதேபோல, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் போராடியவர்களையும் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். இவற்றை வன்மையாக கண்டிக்கிறோம்.

சீமான்: வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத் திமிரில், பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக் கருத்தை உமிழ்ந்திருக்கிறார். தன்னெழுச்சியான மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி அவர் பேசியிருப்பது கண்டனத்துக்
குரியது.

தி.வேல்முருகன்: வெளிநாட்டு நிதியில் பணம் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு, அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்று அதிகாரத் திமிரில் ஆளுநர் பேசி, மக்களின் உணர்வுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் ஆளுநராக நீடிக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர். எனவே, ஆளுநரை வெளியேற்ற நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை: ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள், அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழக மக்களுக்கும் அவர் செய்யும் துரோகமாகும். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பேசியது, அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தைச் சீர்குலைக்கும் முயற்சியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x