Published : 08 Apr 2023 06:55 AM
Last Updated : 08 Apr 2023 06:55 AM
காஞ்சிபுரம்/தஞ்சாவூர்: காஞ்சிபுரம் அரசு காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுமிகளில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி காப்பக உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் வேலூரிலும் காப்பகத்தில் இருந்து 6 சிறுவர்கள் தப்பியுள்ளனர். இதையடுத்து காஞ்சிபுரம், வேலூர் காப்பகங்களில் இருந்து சிறார்கள் தப்பிய விவகாரம் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியில் அன்னை சத்யா என்கிற அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிறு வயதில் திருமண வழக்கு மற்றும் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி வயது குறைந்த நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர மாணவிகளும் தங்கி படிக்கின்றனர். இதன்படி இந்த இல்லத்தில் 29 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். அப்போது பாதுகாவலர் அறைக்குள் இருந்த நேரம் பார்த்து அறைக்கதவை வெளிப்புறமாக தாழிட்ட 6 சிறுமிகள் சுவர் ஏறி குறித்து தப்பிச் சென்றனர். இதனால் காப்பக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலம் சிவகாஞ்சி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர், இந்நிலையில், தப்பி ஓடிய முடிச்சூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் கரசங்கால் பகுதியைச் சேர்ந்த சிறுமியும் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த பெற்றோர் அவர்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் மேலும் நான்கு சிறுமிகளை தேடும் பணிக்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரம் குண்டுகுளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரும் அதேபோல் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சிறுமி ஒருவரும் என மேலும் இருவர் நேற்று மீட்கப்பட்டனர். இதன்படி இதுவரை 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு சிறுமிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
அரசு காப்பகத்தில் இருந்து சிறுமிகள் தப்பி ஓடும் வகையில் பணியில் அஜாக்கிரதையாக இருந்தது தொடர்பாக காப்பக உதவியாளர் ரீனாதேவி, பாதுகாவலர் சுரேஷ்குமார் ஆகிய இருவரை சமூக பாதுகாப்புத் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
விசாரணை: இதேபோல் வேலூர் பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்தும் சிறுவர்கள் சிலர் தப்பியுள்ளனர். இந்த விவகாரங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று அரசினர் கூர்நோக்கு இல்லத்தை ஆய்வு செய்த ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டில் சிறார் திருமணம், சிறார்களுக்கான பாலியல் குற்றங்கள் போன்றவை அதிகமாகி உள்ளது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதை தடுக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். வேலூரில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்களும், காஞ்சிபுரத்தில் அரசின் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 6 சிறுமிகளும் தப்பியோடி உள்ளனர். இதில் 4 பேர் மீட்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. அரசின் பாதுகாப்பு இல்லங்களிலிருந்து சிறார்கள் தப்பிச் செல்வதை தடுக்க தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். கூர்நோக்கு இல்லம், குழந்தைகள் இல்லம் போன்றவற்றில் பாலியல் துன்புறுத்தல், மதமாற்றம் நடைபெறுகிறதா என ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT