Published : 08 Apr 2023 06:20 AM
Last Updated : 08 Apr 2023 06:20 AM
கடலூர்: காவிரி படுகையில் புதிதாக 5 நிலக்கரி சுரங்கங்கள், காவிரிப் படுகையையொட்டி ஒரு சுரங்கம் என 6 நிலக்கரி சுரங்கங்களை அமைக்க திட்டமிட்டு, மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் களத்தில் இறங்கியிருக்கிறது.
‘இந்த திட்டத்தால் வளம் மிகுந்த காவிரி படுகையின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறும்’என்று இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிறுவனத்திற்கு சொந்தமாக சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 ஆகிய 3 நிலக்கரி சுரங்கங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அடுத்து நெய்வேலிக்கு அருகே 3-வது மிகப்பெரிய சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இந்த சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிபடுகையை ஒட்டியே அமையவுள்ளது. எண்ணிக்கை கணக்கின்படி இது 4-வது நிலக்கரி சுரங்கமாக அமைய இருக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே ஐந்தாவதாக வீராணம் நிலக்கரித் திட்டம், ஆறாவதாக பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம், ஏழாவதாக சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம் (மூன்றும் கடலூர் மாவட்டங்களில் வருபவை), எட்டாவதாக தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி நிலக்கரித் திட்டம், ஒன்பதாவதாக அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளன.
1.25 லட்சம் ஏக்கர் நிலம் வேண்டும்: ஏற்கெனவே செயல்பட்டு வரும் 3 நிலக்கரி திட்டங்கள் தவிர, மீதமுள்ள 6 திட்டங்களுக்காக மட்டும் குறைந்தது 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடும்.
இவற்றில் வீராணம், பாளையம்கோட்டை, சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே, வடசேரி (தஞ்சை) ஆகிய 4 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட காவிரி வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. ஐந்தாவது திட்டமான மைக்கேல்பட்டி நிலக்கரித் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றிற்கு மிக அருகில் அமைகிறது.
சேத்தியாத்தோப்பு, வீராணம், பாளையம்கோட்டை ஆகிய நிலக்கரித் திட்டங்களுக்காக ஏற்கெனவே 500-க்கும் கூடுதலான இடங்களில் ஆழ்துளைகள் போடப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. வடசேரி நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், மைக்கேல்பட்டி திட்டத்திற்காக 19 ஆழ்துளை கிணறுகளும் அமைத்து, ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகள் நடக்கும் போதே சிறுசிறு எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கபட்ட ஆணையம், இப்பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் ஒப்பந்த ஏல நடைமுறையை தற்போது வெளியிட்டிருக்கிறது.
“இத்திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாக பாதிக்கும், இப்பகுதி விவசாயம் முற்றிலும் அழிக்கப்படும். வீராணம் ஏரியே இல்லாமல் போகும் நிலை ஏற்படும். நாளடைவில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதளத்துக்கு செல்லும்; குடிநீர் பஞ்சம் ஏற்படும்” என இப்பகுதி விவசாயிகளுடன் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
என்எல்சி சுரங்க விரிவாக்கம் மற்றும் மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தவுள்ள நிலம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே நிலக்கரித் திட்டம், வீராணம் நிலக்கரித் திட்டம் மற்றும் பாளையம்கோட்டை நிலக்கரித் திட்டம் என கடலூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 91,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அடுத்த சில ஆண்டுகளில் புதிய சுரங்கங்கள் அமைக்கப்பட்டு, நிலக்கரி எடுக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர்வீ. இளங்கீரன் கூறுகையில், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் மாநில அரசின் அனுமதியின்றி, மத்திய அரசு நிலக்கரி ஆய்வு மேற்கொண்டது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நிலக்கரி மின் திட்டத்தை கைவிட்டு, மரபு சார் எரிசக்தி திட்டமான சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்” என்றார்.
வீராணம் ஏரிக்கு அருகே உள்ள குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜி. தமிழ்வாணன் கூறுகையில், “வீராணம் ஏரியை ஒட்டி வரும் இத்திட்டம், ஏரியை முற்றிலும் அழிக்கும். இப்பகுதி பாலைவனமாகும், இப்பகுதி விவசாயிகள், விவசாயக்கூலி தொழிலாளர்கள், பொதுமக்கள் நாளடைவில் அகதியாகி, வெளி மாநிலங்களுக்கு கூலி வேலை தேடி செல்லும் நிலை ஏற்படும். இத்திட்டத்தை கைவிடாவிட்டால், அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்றார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநில பொது செயலாளரும் கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பின் தலைவருமான பெ.ரவிந்திரன் கூறுகையில், “விவசாயிகள் பதற்றத்திலும் பயத்திலும் வாழ வேண்டிய சூழலை இந்த அறிவிப்பு உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசும் இதுபோன்ற பேரழிவுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT