Published : 16 Sep 2017 10:47 AM
Last Updated : 16 Sep 2017 10:47 AM

‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு பொறுப்பு அதிகம் உள்ளது: ‘யாதும் தமிழே’ விழாவில் நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வலியுறுத்தல்

பாரம்பரியமிக்க பத்திரிகை என்பதால் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளன என்று ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் வகையில் ‘யாதும் தமிழே’ என்ற 2 நாள் விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 108 நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மங்கல இசையுடன் விழா தொடங்கியது. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் என்.ராம், இயக்குநர் அகிலா, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். அதைத் தொடர்ந்து ‘யாதும் தமிழே’ விழாவின் லோகோவை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். புத்தர் கலைக்குழுவின் பறையாட்டம் நடந்தது.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆசிரியர் கே.அசோகன் வரவேற்புரையாற்றினார். விழாவுக்கு தலைமை வகித்து நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

139 வயதான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கும் நீதித் துறைக்கும் இனம் காண முடியாத தொடர்பு உண்டு. ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிபதியாக இருந்த சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒரு இந்தியர் நீதிபதி ஆக வேண்டும் என குரல் கொடுப்பதற்காகவே 1878-ல் வார இதழாக ‘தி இந்து’ தொடங்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ‘தி இந்து’ அலுவலக கட்டிடமும், சென்னை உயர் நீதிமன்ற கட்டிடமும் இந்த ஆண்டு 125-வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகின்றன.

நீதித் துறைக்கும், ‘தி இந்து’வுக்கும் நெருங்கிய தொடர்பு மட்டுமல்ல, சில சிக்கல்களும் ஏற்பட்டன. 100 ஆண்டுகளுக்கு முன்பு அன்னிபெசன்ட் அம்மையார் ‘தி இந்து’ மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி, ‘தி இந்து’ நடுநிலையாக செயல்பட்டிருப்பதாக தீர்ப்பளித்தார். ஒரு நீதிபதியாக நீதித் துறைக்கும், ‘தி இந்து’வுக்கும் உள்ள தொடர்பை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

‘தி இந்து’ தொடங்கப்பட்டு 139 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், 135 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழ் இந்து வெளிவந்தது. வயதான ‘தி இந்து’வுக்கு பிறந்த குழந்தை தமிழ் இந்து. வயதான காலத்தில் குழந்தை பிறந்தால் அதை அடக்க முடியாது. நாம் எந்த பரம்பரையில் இருந்து வருகிறோமோ அந்த பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உண்டு. அதுபோல ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டிய கடமை தமிழ் இந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட நாளிதழ் தவறு செய்தால் யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால், பாரம்பரிய பத்திரிகை என்றால், நீங்களே தவறு செய்யலாமா என கேட்பார்கள். எனவே, ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு பொறுப்புகள் அதிகம்.

பத்திரிகைகள் இல்லாத அரசாங்கம் வேண்டுமா, அரசாங்கம் இல்லாத பத்திரிகைகள் வேண்டுமா எனக் கேட்டால் இரண்டாவதையே தேர்ந்தெடுப்பேன் என அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன் 150 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். இதன்மூலம் இதழியலின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை பத்திரிகைகளுக்கும் தர வேண்டும் என இந்தியாவின் இதழியல் தந்தை என போற்றப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி கூறினார். ஊடகங்களின் அவசியத்தை இது நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் பள்ளி, கல்லூரிகளில் படிக்க முடியாதவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வாய்ப்பை பத்திரிகைகள் தருகின்றன.

தகுதியானவர்களுக்கு விருது

உலகின் 10 சிறந்த நாளிதழ்களில் ஒன்றாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழை 1965-ல் ‘தி டைம்ஸ்’ நாளிதழ் தேர்ந்தெடுத்தது. தென்னிந்திய உச்சரிப்பில் வரும் இந்தியாவுக்கான நாளிதழ் என டைம்ஸ் இதழ் அப்போது புகழாரம் சூட்டியது. 1968-ல் அமெரிக்க செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் நிறுவனம், ‘தி இந்து’வுக்கு உலக இதழியல் சாதனையாளர் விருது வழங்கியது. இந்தியாவின் முன்மாதிரி நாளிதழ் ‘தி இந்து’, எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் லட்சியத்தில் இருந்து தடம் மாறாத இதழ் என அப்போது புகழாரம் சூட்டியது. இவற்றையெல்லாம் ‘தி இந்து’ தமிழ், கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

‘தமிழ் திரு’ விருது பெறும் ஐவரின் சாதனைகளை வேறொருவர் முறியடிக்க இன்னொரு நூற்றாண்டு வேண்டும். தகுதிவாய்ந்தவர்களுக்கு வாசகர்கள் மூலம் தகுதியான பத்திரிகை விருது வழங்குவது தலைவணங்கத்தக்கது. இவ்வாறு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார்.

அதைத் தொடர்ந்து கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (ஆய்வு), எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (இலக்கியம்), வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (கலை), கல்வியாளர் பிரபா கல்விமணி (கல்வி), விஞ்ஞானி என்.வளர்மதி (தொழில்நுட்பம்) ஆகியோருக்கு ‘தமிழ் திரு’ விருதுகளை நீதிபதி ராமசுப்பிரமணியன், கமல்ஹாசன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்களைப் பற்றியும் அவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்தும் ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் விளக்கினார்.

‘யாதும் தமிழே’ விழாவை ஜில்லட், மீரா சீயக்காய், ராம்ராஜ் காட்டன், அபிராமி ரைஸ், ஹமாம், ஆச்சி மசாலா, ஜீ தமிழ் தொலைக்காட்சி, பிக் எஃப்எம், ஏசிடி பைபர் நெட், ஏஜிஎஸ் சினிமாஸ் ஆகியன இணைந்து நடத்துகின்றன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x