

தமிழகத்துக்கு ஓராண்டுக்குப் பின்னர் முழுநேர ஆளுராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். முழுநேர ஆளுநர் நியமனத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
திமுக எம்.பி. கனிமொழி:
தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமிக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நீண்ட தாமதத்துக்குப் பின்னர் தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரை நியமித்துள்ளனர். தமிழக அரசியல் சூழலுக்கு முழுநேர ஆளுநர் தேவை. தமிழகத்தின் புதிய ஆளுநர் ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம். மக்கள் தேவைகளை ஆளுநர் புரிந்துகொண்டு நேர்மையாகவும் நியாயமாகவும் கடமையாற்றுவார் என எதிர்பார்க்கிறோம். எதிர்க்கட்சியினர் கூறும் நியாயங்களை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
இரா.முத்தரசன்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், "இப்போதுதான் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏராளமான பணிகள் காத்துக்கிடக்கின்றன. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அவர் செயல்படுவார் என நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
தொல்.திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "தமிழகத்துக்கு புதிய அளுநருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி தனது கடமைகளை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறோம். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சீர்செய்து அரசியலில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்" என அவர் கூறியுள்ளார்.