Published : 08 Apr 2023 06:07 AM
Last Updated : 08 Apr 2023 06:07 AM
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.2.76 கோடியில் நவீன கருவி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சுகாதாரத் துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மணி, ஆர்எம்ஓ பிரதாப் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர்கள் உதயநிதி, சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மருத்துவமனை 1912-ம் ஆண்டு 120 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது. 110 ஆண்டுகளைக் கடந்து தற்போது 834 படுக்கைகளுடன் இம்மருத்துவமனை சேவை புரிந்து வருகிறது.
தினமும் சராசரியாக 2,900 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் டெலிகோபால்ட் கதிரியக்கம் கருவி மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் புற்றுநோய் கட்டிகளுக்கு மிகத்துல்லியமாக கதிர்வீச்சு சிகிச்சை அளிக்க முடியும். வலியால் அவதியுறும் புற்று நோயாளிகளுக்கு வலி நிவாரணியாகவும் ரத்தக் கசிவைத் தடுக்கவும் இக்கருவி பயன்படும்.
தினந்தோறும் 30-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் இதன்மூலம் பயன் பெறுவார்கள். ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் துரிதமாக மருத்துவ சிகிச்சை அளிக்க பிரத்யேகமாக இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி நிதி ஒதுக்கீடு மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பல் மருத்துவக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
பல்சார்ந்த பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த நவீன கருவிகளின் மூலம் துரிதமாகச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படும். ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பிரத்யேகமாக சலவைக்கென்று புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நவீன சலவை செய்யும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் தினமும் 1,000-க்கும் மேற்பட்ட துணிகளைச் சலவை செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT