

ரயில்வே பட்ஜெட்டில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்
மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் அறிவிப்புகள் அமைந்துள்ளன.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே துறையை திறந்து விடுவதற்கு தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநில தேர்தலை மனதில் வைத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும், ரயில் பயணிகளுக்கு வை-ஃபை, இன்டர்நெட், மொபைல்போன், சிசிடிவி வசதிகள் ஏற்படுத்தப்படும்.வைர நாற்கர ரயில்வே பாதை அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
நிதி ஆதாரத்துக்கு கட்டண உயர்வை மட்டுமே எதிர்பார்க்காமல், தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டின் மூலம் மேம்படுத்த நினைப்பதில் தவறில்லை.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
மொத்தம் 58 புதிய ரயில்களில் 5 மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது.
பெங்களூர் - ஓசூர் புறநகர் ரயில், பெங்களூர் நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்து வரும் நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, தமிழகத்திற்கு எந்த பயனும் தராது.
சுருக்கமாக கூற வேண்டுமானால் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
உள்நாட்டு முதலீடுகள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பு கவலை அளிக்கிறது. சென்னை ராயபுரத்தை நான்காம் முனையம் ஆக்குவது, சென்னை சென்ட்ரல் நிலையத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. அவ்வப்போது ரயில் கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.
சமக தலைவர் ஆர்.சரத்குமார்
பயணிகள் கட்டணத்தையும், சரக்குக் கட்டணத்தையும் சில நாட்களுக்கு முன்பே உயர்த்திவிட்டு, தற்போது கட்டண உயர்வில்லா பட்ஜெட் என்று அறிவித்திருப்பது நகைச்சுவைக்குரிய செயல்.
ரயில்வே துறை வளர்ச்சிக்கு அன்னிய நேரடி முதலீடு என்பது கவனமாகக் கையாள வேண்டிய ஒன்றாகும். அன்னிய நேரடி முதலீட்டின் மூலம் வசதிகளும் தொழில் நுட்பங்களும் பெருகலாம், ஆனால் ஏழை,எளிய, நடுத்தர மக்களை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்
வைர நாற்கர ரயில் பாதை திட்டம், புல்லட் ரயில் திட்டம் அறிவித்திருப்பது சாதனை திட்டமாகும்.
ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பதன் மூலம், ரயில்வே துறை பணிகள் தொடர்பான பொறியியல் பட்டதாரிகள் பெருமளவில் உருவாக வாய்ப்பாகும். சரக்கு ரயில்களுக்கென தனி பாதை, குறிப்பிட்ட சில ரயில் நிலையங்கள் பராமரிப்பு பணிகளுக்காக பெருந்தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதும் துணிச்சலான திட்டங்களாகும்.
தென்னிந்திய வர்த்தகசபை எஸ்.ராகவன்
முக்கியமான நகரங்கள் வழியாக வைர நாற்கரத் திட்டம், ரயில் நிலையங்களில் சூரிய மின் சக்தி உற்பத்தி, ரயில்வே பல்கலை, சரக்கு முனையங்கள் ஏற்படுத்துதல், தனியாக சரக்கு ரயில் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தல், துறைமுகங்களை ரயில்வே பாதைகளுடன் இணைத்தல், தனியார் முதலீடு பங்களிப்பு போன்றவை வரவேற்கத்தக்க அறிவிப்புகளாகும்.