

சென்னை: தெரு விளக்குகளில் விளம்பரம் செய்ய அனுமதி அளித்து வருவாய் ஈட்டும் திட்டம் தொடர்பாக சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் கடந்த மாதம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டில் வருவாய் வரவு ரூ.4,131.70 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாகவும், மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சி ரூ.334 கோடி நிதி பற்றாக்குறையில் இருப்பது தெரியவந்தது.
குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு ரூ.2573.54 கோடி கடன் உள்ளது. இந்தக் கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.148 கோடி செலுத்தப்படுகிறது. மேலும், அரசு துறைகளுக்கு 728 கோடி ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக வரி வருவாய் தவிர்த்து மற்ற வருவாயை உயர்த்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, சென்னையில் சாலையோரங்களில் வாகனம் நிறுத்தினால் கட்டணம், பேருந்து நிழற்குடைகளில் விளம்பரம் உள்ளிட்டவை மூலம் வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தெரு விளக்குள், பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள், போக்குவரத்து தீவுகள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு அனுமதி அளித்து வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதன்படி, 17,195 தெரு விளக்குகள், 47 சாலை மையத் தடுப்புகள், 61 போக்குவரத்து பூங்காக்கள், 41 பூங்காக்கள் ஆகியவற்றில் விளம்பரத்திற்கு அனுமதி அளித்து வருவாய் ஈட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான இதற்கான சாத்தியக் கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.