இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆரம்ப சுகாதார கிளினிக் நடத்த உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆரம்ப சுகாதார கிளினிக் நடத்த உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்துவதை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட கோரி சமூக மருத்துவ சேவை மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான டிப்ளமோ படித்தவர்கள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக மருத்துவ சேவைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் பிரிவில் இரண்டாண்டு டிப்ளமோ படித்தவர்கள், ஆரம்ப சுகாதார கிளினிக்குகள் நடத்தி வருகின்றனர். தங்களது பணியில் அரசும், காவல் துறையும் தலையிடுகின்றனர். எனவே, அதைத் தடுக்க உத்தரவிடக் கோரி கணேசன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தமிழ்நாடு கிளினிக்கல் நிறுவனங்கள் ஒழுங்கு முறை சட்டத்தின்படி, அரசு அனுமதி பெற்றுதான் கிளினிக்குகளை நடத்த முடியும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட கவுன்சில்களில் பதிவு செய்தால் மட்டுமே அவற்றை நடத்த முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏற்கெனவே மதுரை கிளையில் ஒரு வழக்கில், டிப்ளமோ முடித்தவர்கள் கிளினிக்குகளை நடத்த முடியாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது ஆயுஷ் துறை பரிந்துரை இல்லாமல், தமிழகம் முழுவதும் கிளினிக்குகளை நடத்த மனுதாரர்களுக்கு உரிமையில்லை என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in