

சென்னை: கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
கோவை - சென்னை இடையே வரும் 9-ம் தேதி முதல் 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை - கோவை இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை நாளை பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார். தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் முதல் 'வந்தே பாரத்' ரயில் இதுவாகும். இதன்படி, வரும் 9-ம் தேதி முதல் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இந்த ரயில் இயக்கப்படும்.
இந்த கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். செல்லும் வழியில், திருப்பூருக்கு காலை 6.35 மணிக்கு சென்றடைந்து, காலை 6.37 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு காலை 7.12 மணிக்கு சென்றடைந்து, காலை 7.15 மணிக்கு புறப்படும். சேலத்துக்கு காலை 7.58 மணிக்கு சென்றடைந்து, காலை 8 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
மறுமார்க்கத்தில், மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். வரும் வழியில், சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்தடைந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும் ரயில், ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்தடைந்து, மாலை 6.35 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, இரவு 7.15 மணிக்கு புறப்படும்.
இந்நிலையில், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி AC Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 1,215 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. AC Executive Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 2,310 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், காலியாக இருக்கும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் மாறுபடும்.