

கோடானு கோடி மக்களின் உள்ளத்தில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் காமராஜருக்கு இன்று பிறந்தநாள். அவர் பிறந்த விருதுநகருக்கு இணையான பெருமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் உண்டு.
1969-ம் ஆண்டு, நாகர்கோவில் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் காமராஜர். பெரும் பலத்துடன் எதிரணி இவருக்கு எதிராக களம் காண, அத்தனையையும் கடந்து காமராஜரை டெல்லிக்கு அனுப்பி வைத்த பெருமை குமரி மண்ணுக்கு உண்டு.
அத்தேர்தல் அனுபவங்கள் குறித்து, நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆல்பென்ஸ் நதானியேல் (70) கூறியதாவது:
1969-ம் வருஷம்.. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிச்சுட்டு இருந்தேன். எனக்கு சொந்த ஊரு குமரி மாவட்டம் மணலிக்கரை.
சுதந்திரா கட்சி சார்பில் நாகர்கோவில் தொகுதியில் செல்வாக்கு மிக்க மத்தியாஸ் நிறுத்தப்பட்டிருந்தார். அப்போதைய திமுக அரசின் மந்திரி பட்டாளமே காமராஜருக்கு எதிராக முழுமூச்சில் தேர்தல் வேலை பார்த்தது.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்து வந்திருந்த மாணவர்கள் காமராஜருக்கு ஆதரவாக பல இடங்களில் கூட்டம் போட்டோம். மாவரவிளை, மணலிக்கரை பகுதியில் என் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அத்தனை எளிமையாக வந்து பேசிட்டு போனாரு.
நீண்ட ஆண்டுகளுக்கு பின் சென்னையில் காமராஜர் வீட்டுக்கு சென்றேன். என்ன விசயம்ண்ணேன்னாரு.
`சும்மா தான் வந்தேன்’னு பதில் சொன்னேன். பலமா சிரிச்சவரு `சரி, மணலிக்கரை ஊர் மக்கள் எல்லாரும் நல்லா இருக்காங்களா?’ன்னு கேட்டாரு. என்னவொரு ஞாபக சக்தி பாருங்க. ஒரு கூட்டம் தான் போட்டோம். அது தான் காமராஜர்.
படிப்பு முடிந்து நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் பேருரையாளர் வேலைக்கு வந்துட்டேன். காமராஜர் மீது கொண்ட பற்றினால் காங்கிரஸ் கட்சியையும் இறுக்க பிடித்துக் கொண்டேன். இப்போ காங்கிரஸ்ன்னாலே வெறுப்பு வந்துடுச்சு. அப்போ இருந்த காங்கிரஸின் நேர்மை இப்போது இல்லை. காங்கிரஸ் கட்சி, கமர்ஷியல் கம்பெனி ஆகி விட்டது. காமராஜர் எனும் சகாப்தம் மட்டும் நெஞ்சை நிறைத்துக் கொண்டிருக்கிறது, என்றார்.