

சென்னை: திமுகவின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சி கால ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.
பாஜக தொடக்க தின விழா சென்னை தியாகராயநகரிலுள்ள கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாஜக கொடியை மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்றினார்.
மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் நாட்காட்டியும் வெளியிட்டு, தொண்டர்களுக்கு அண்ணாமலை வழங்கினார். பின்னர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அத்திப்பட்டு துரைக்கண்ணன் தலைமையில் 15 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: குறுகிய காலத்தில் பாஜக திமுகவைவிட அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே காரணம் என்று கூறினார். அது முற்றிலும் உண்மைதான். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. கண்டிப்பாக தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தொண்டர்களின் உழைப்பு அதிகமாக இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு அதனை ஒப்பந்தமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவல் வந்தவுடனே அதைநாங்கள் மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு இங்கு கொண்டு வராது.
டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த ஆட்சியின் போது அறிவித்தார்கள். கண்டிப்பாக விவசாயம் செய்யும் நிலங்கள் மற்றும் பாதுகாக்கும் மண்டலங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. பாஜகவை பொறுத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு, 4 மடங்காக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் பட்டியலில், திமுகவின் இந்த ஆட்சி காலம் மட்டும் அல்ல,போன ஆட்சிக் காலத்தில் செய்த ஊழல் குறித்து தகவல் வெளிவரும். அது எந்தளவு அதிர்ச்சியாக இருக்க போகிறது என்பது அனைவருக்கும் தெரியதான் போகிறது. 2ஜி ஊழலை கூட துரிதப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.