உணவு பாதுகாப்பு அலுவலர்களாக சித்த மருத்துவர்களை நியமிக்கலாம் - தேர்வு பட்டியலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

உணவு பாதுகாப்பு அலுவலர்களாக சித்த மருத்துவர்களை நியமிக்கலாம் - தேர்வு பட்டியலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

மதுரை: உணவு பாதுகாப்பு அலுவலர்களாக சித்த மருத்துவர்களை நியமிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சித்த மருத்துவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அலுவலர் பணித் தேர்வுக்கு விண்ணப்பித்தோம். தேர்வும் எழுதினோம். ஆனால் உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு தேர்வானோர் பட்டியலில் எங்கள் பெயர்கள் இடம் பெறவில்லை.

உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நியமனத்தில் சித்த மருத்துவர்களை கருத்தில் கொள்ளாமல் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலை ரத்து செய்து சித்த மருத்துவர்களையும் தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: சித்த மருத்துவம் தமிழக கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தது. பல்வேறு நெருக்கடியான காலகட்டத்தில் சித்த மருத்துவர்களின் பங்கை நாம் மறந்துவிட முடியாது. கரோனா காலத்தில் கபசுர குடிநீர், டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் ஆகியவை மிகுந்த பலனளித்தது.

அரசு சித்த மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறது. காலத்துக்கு ஏற்ப சித்த மருத்துவப் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது எம்பிபிஎஸ், சித்த மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவச் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.

இங்கு உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு சித்த மருத்துவர்கள் தகுதியற்றவர்கள் எனக் கூறியுள்ளனர். இதை ஏற்க முடியாது. எந்த அமைப்பும் சிறப்பாக செயல்படுவது அதை நிர்வாகம் செய்பவர்களின் கைகளில்தான் இருக்கிறது.

இதனால் சித்த மருத்தவர்களான மனுதாரர்களை உணவு பாதுகாப்பு அலுவலர் பணிக்கு பரிசீலிக்கலாம். எனவே, உணவு பாதுகாப்பு அலுவலர் பணித் தேர்வு பட்டியலை ரத்து செய்து, பின்னர் மனுதாரர்களை இணைத்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in