

ராமேசுவரம்: இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த டி.விசாகலிங்கம்(50) உட்பட 12 மீனவர்கள் அந்நாட்டு கடற்படையினரால் மார்ச் 23-ல் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், 12 மீனவர்களில் டி.விசாகலிங்கத்தைத் தவிர 11 மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதில் டி.விசாகலிங்கம் 2022-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிபந்தனையின் அடிப்படையில் இலங்கை நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
2-வது முறையாக...: நிபந்தனையை மீறி டி.விசாகலிங்கம் மீண்டும் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக 2-வது முறையாக கைது செய்யப்பட்டார். இதனால், அவருக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டி. விசாகலிங்கம் கொழும்புவில் உள்ள வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.