

ஈரோடு: தாளவாடியில் பயிர்களைச் சேதப்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க வந்த 2 கும்கி யானைகள் மீண்டும் முதுமலைக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
ஈரோடு மாவட்டம் தாளவாடி, ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘கருப்பன்’ எனப் பெயரிடப்பட்ட யானை விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் கும்கி யானைகள் உதவியுடன், கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இம்முறை, முதுமலையில் இருந்து சுஜய், பொம்மன் என்ற இரு கும்கி யானைகள் தாளவாடிக்கு அழைத்து வரப்பட்டன. கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதும், கும்கி யானைகள் உதவியுடன் அதைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
ஆனால், கடந்த 10 நாட்களாக விளைநிலங்களில் நுழையும் கருப்பன் யானை, வனத்திற்குள் தப்பி வருகிறது. பலமுறை மயக்க ஊசி செலுத்தப்பட்டும், அதற்கு கட்டுப்படாமல் வனத்திற்குள் யானை செல்வது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி முதுமலை வருவதையொட்டி, தாளவாடியில் இருந்த இரு கும்கி யானைகளும், தெப்பக்காடு முகாமிற்கு நேற்று முன் தினம் மாலை அழைத்துச் செல்லப்பட்டன.
இரவு நேரங்களில் தொடர்ந்து ‘கருப்பன்’ யானை விளைநிலங்களைச் சேதப்படுத்தி வரும் நிலையில் கும்கி யானைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.