சென்னையில் கழிவுநீர் குழாய்களை மாற்ற, உந்து நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் நேரு தகவல்

சென்னையில் கழிவுநீர் குழாய்களை மாற்ற, உந்து நிலையம் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூ.100 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் நேரு தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் பழுதடைந்த சிறிய கழிவுநீர் குழாய்களை மாற்றி உந்து நிலையங்களை அமைக்க அந்தந்த பகுதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தி.நகர் தொகுதியில் அழகிரி நகர் பகுதியில் கழிவுநீர் உந்து நிலையம், பழையகழிவுநீர் பாதைகளைச் சீரமைத்தல் வேண்டும். தொகுதி முழுவதும் பரவலாக கழிவுநீர் அடைப்பு உள்ளது.மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்ப குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி எம்எல்ஏ ஜெ.கருணாநிதி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: தி.நகர் தொகுதியில் உள்ள வடபழனி அழகிரி நகரில் 9 தெருக்கள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள சாலையோர கழிவுநீர் பாதையில் சேகரிக்கப்பட்டு, எம்எம்டிஏ காலனியில் உள்ள கழிவு நீர் இரைப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.

அழகிரி நகரிலிருந்து எம்எம்டிஏ காலனிக்கு செல்லும் கழிவுநீர் உந்து குழாய் சிறியதாகவும், பழுதடைந்தும் இருந்ததால் கழிவுநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதைத் தவிர்க்க, இரு பகுதிக்கும் நடுவில் உள்ள லோகநாதன் காலனி 3-வது தெருவில் சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் கடந்தாண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டது. இதுதவிர, அழகிரி நகரிலிருந்து லோகநாதன் காலனிக்கும் அங்கிருந்து எம்எம்டிஏ காலனிக்கும் புதிய கழிவுநீர் குழாய்கள் ரூ.2.82 கோடியில் அமைக்கப்பட்டு, பிரச்சினை தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பழுதடைந்த சிறிய குழாய்களை மாற்றி உந்துநிலையங்கள் அமைக்க அந்தந்த பகுதிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் செய்து தர அரசு முடிவெடுக்கும். அதே நேரத்தில், சேதப்பட்ட மாதவரம் மேற்கு காலனி, ஓட்டேரி, கொரட்டூர், முகப்பேர், டி.பி.சத்திரம், தி.நகர் சிஐடி நகர் பகுதியிலும் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ஓட்டேரி, மயிலாப்பூர், தி.நகர், டிரஸ்ட்புரம் உள்ளிட்டபகுதிகளில் இதுபோன்ற நிலை கண்டறிந்து சரி செய்யப்பட்டுள்ளது. குழாய்கள் மாற்றப்பட்டு, உந்துநிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கழிவுநீர் குழாய்கள் உடைந்து, சாலை உள்வாங்கும் நிலையைத் தடுக்க அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இடத்தை கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in