Published : 07 Apr 2023 06:02 AM
Last Updated : 07 Apr 2023 06:02 AM
சென்னை: தமிழகத்தில் 130 இடங்களில் உள்ளவீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகளில் 61 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் தற்போதுள்ள விதிகள்படி கட்டித் தரப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, மன்னார்குடி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது தொகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 132 குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் புதியகுடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா தனது தொகுதியில் கஜா புயலால் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பை மாற்றிகட்டுவது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இவற்றுக்கு பதிலளித்து வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: மன்னார்குடியில் 5 ஏக்கர் பரப்பில் 132 வீடுகள், 70 ஆயிரம் சதுரடியில் இருக்கிறது. 132 வீடுகளும் மிகமோசமான நிலையில் இருப்பதால் அவற்றை இடிக்க உத்தரவிடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன.
இடித்த பின்னர் புதிய வளாகம் வீடாகவோ, வணிக வளாகமாகவோ கட்ட ஏற்பாடு செய்யலாம். தற்போது 70 ஆயிரம் சதுரடியில் உள்ளது. புதியதாக கட்டும்போது தற்போதுள்ள விதிகள்படி 5 லட்சம் சதுரடி கட்ட முடியும். மிகப்பெரிய அளவில் வீட்டுவசதி வாரியத்துக்கும், பொதுமக்களுக்கும் பயன் கிடைக்கும்.
தமிழகத்தில் 130 இடங்களில் வாடகை குடியிருப்புகள் வாரியத்தின் சார்பில் உள்ளன. அதில் 61இடங்கள் மிக மோசமாக உள்ளதால், அங்கிருப்பவர்களை உடனே காலி செய்யும்படி கூறிவிட்டு, அக்கட்டிடங்களை இடிப்பதற்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் இடிக்க இடிக்க புதிய திட்டங்கள் வரும். தற்போதுள்ள விதிகள்படி பலமடங்கு கட்டிடங்கள் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT