Published : 08 Jul 2014 06:11 PM
Last Updated : 08 Jul 2014 06:11 PM

அன்புமணி கோரிக்கையை ரயில்வே அமைச்சர் ஏற்காதது வருத்தம் அளிக்கிறது: ராமதாஸ்

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தியும், அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அவர் குறைகூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2014 -15 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், அதிக தொடர்வண்டிகளும் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கிறார் தொடர்வண்டி அமைச்சர் சதானந்த கவுடா.

தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 58 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 5 மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இவற்றிலும் சென்னை-ஷாலிமார் பிரீமியர் விரைவு வண்டி, சென்னை-அகமதாபாத் வாரமிருமுறை விரைவு வண்டி, சென்னை-விசாகப்பட்டினம் வார விரைவு வண்டி ஆகியவை சென்னையை தாண்டி தமிழகத்திற்குள் வராதவை. இவற்றால் தமிழகத்திலுள்ள சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

மீதமுள்ள இரு தொடர்வண்டிகளில் ஒன்றான பெங்களூர் - ஓசூர் புறநகர் தொடர்வண்டி பெங்களூரிலுள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துவர வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிக தொடர்வண்டிகளை இயக்க வேண்டும்; மதுரை - கன்னியாகுமரி இடையே இரட்டைப் பாதை அமைக்க வேண்டும்; மொரப்பூர் வரை உள்ள பாதையை தருமபுரி வரை நீட்டிக்க வேண்டும்; சென்னை-புதுச்சேரி, திண்டிவனம் - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி ஆகிய நகரங்களுக்கிடையே புதிய பாதை அமைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்; எழும்பூர் - தாம்பரம் இடையிலான புறநகர் ரயில்பாதையை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்; சென்னை எழும்பூர்- சென்ட்ரல் தொடர்வண்டி நிலையங்களை இணைக்க வேண்டும்; ஜோலார்பேட்டை - ஓசூர் இடையே கிருஷ்ணகிரி வழியாக புதிய பாதை அமைக்க வேண்டும்.

கன்னியாகுமரியிலிருந்து தில்லி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் தொடர்வண்டிகளின் பழைய பெட்டிகளை அகற்றிவிட்டு, புதிய பெட்டிகளை இணைக்க வேண்டும்; சென்னையிலிருந்து ஷீரடிக்கு அதிக எண்ணிக்கையில் தொடர்வண்டிகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழகத்திற்கான திட்டங்களை அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பா.ம.க இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினருமான அன்புமணி இராமதாசு நேரில் வலியுறுத்தியும் அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

புதிய பாதைகளை அமைப்பதற்கான ஆய்வு, இரட்டைப் பாதை அமைத்தல், புறநகர் வண்டிகளை அதிகரித்தல் ஆகியவற்றுக்கான திட்டங்களில் ஒன்றுகூட தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. சுருக்கமாக கூற வேண்டுமானால் தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. தொடர்வண்டி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தனியார்துறை முதலீடுகள் அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். தொடர்வண்டித்துறையில் தவிர்க்க முடியாத சில விஷயங்களில் தனியார் முதலீட்டை அனுமதிப்பதில் தவறு இல்லை என்ற போதிலும், இது தனியார் மயமாக்கலுக்கான நுழைவு வாயிலாக அமைந்து விடாமல் இருப்பதை நரேந்திர மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்.

தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. தொடர்வண்டிப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்; புதிய தலைமுறை முன்பதிவு வசதி உருவாக்கப்படும்; தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் தொடர்வண்டிகளில் வை-ஃபை இணைப்பு ஏற்படுத்தப்படும்; செல்பேசி குறுஞ்சேதி மூலம் அடுத்துவரும் நிலையங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்; அடுத்த 5 ஆண்டுகளில் தொடர்வண்டித்துறை காகித பயன்பாடு இல்லாததாக்கப்படும்; ரயில்கள் தூய்மையாக்கப்படும் என்பன போன்ற பயணிகள் வசதிக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

அதேபோல், விரைவில் அதிவேக புல்லட் தொடர்வண்டிகள் இயக்கப்படும்; பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு புல்லட் வண்டிகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகளையும் பா.ம.க. வரவேற்கிறது.

கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறை திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தொடர்வண்டிகளையும், திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவாவது தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கைகளை அமைச்சர் சதானந்த கவுடா நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x