

நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்கிறார்கள். தினமும் அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம்.
அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதிகாலை 6 மணி, காலை11.30 மணி, மாலை 6.30 மணி,இரவு 8 மணி ஆகிய 4 நேரங்களில் அலங்கார தீபாராதனைநடைபெறும். தீபாராதனையின் போதும், புரட்டாசி நவராத்திரி கொலுவின்போதும், திருவிழாக்காலங்களில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளும்போதும் அபிராமி அந்தாதி, தேவாரம் பாடல்களை ஓதுவார்கள் பாடுவர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ஓதுவாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணிய ஓதுவார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புஓய்வு பெற்று விட்டார். அதன்பிறகு புதிதாக ஓதுவார் நியமிக்கப்படவில்லை. இதனால், பாடல் பாடுவதற்கு ஓதுவார் இல்லாத நிலை இருந்து வந்தது. எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ஓதுவார் நியமிக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
திருச்சி திருவானைக்கோவில் அருகே திருமலை சிவா உய்யகொண்டான் கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்த பிரசன்னா தேவி, தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு புதிய ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்கோயிலுக்கு முதல்முறையாக பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாராதனை நேரங்களில் இவர்அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம்பாடல்களைப் பாடியது அங்கிருந்த பக்தர்களை மனமுருகச் செய்தது.