Published : 07 Apr 2023 06:32 AM
Last Updated : 07 Apr 2023 06:32 AM
குடியாத்தம்/வேலூர்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட திமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக குடியாத்தம் ஒன்றியச் செயலாளர்கள் புகார் மனு அளித்தனர்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் படத்தை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய குற்றச் சாட்டின் பேரில் பொள்ளாச்சி 20-வது வார்டு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார் என்பவரை காட்பாடி காவல் துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதற்கு, அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பை காவல் துறையினரிடம் காட்டினர்.
இதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் குடியாத்தம் குமரன் கடந்த சில நாட்ளுக்கு முன்பு பதிவிட்ட அவதூறு வீடியோ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினர் நேற்று புகார் மனுக்களை அளித்தனர்.
அதன்படி, குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் குடியாத்தம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.ராமு அளித்துள்ள மனுவில், ‘‘முன்னாள் முதல்வரும் சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட குடியாத்தம் குமரன் மீதும் வீடியோவை வெளியிட்ட யுடியூப் சேனல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
அதேபோல், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடியாத்தம் மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவா அளித்த மனுவில், ‘‘முன் னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் குடியாத்தம் குமரன் பேசிய வீடியோ கடந்த மாதம் 14-ம் தேதி முதல் பகிரப்பட்டு வருகிறது.
அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த வீடியோவை தடை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். அப்போது, வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்ட மாநகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT