

சென்னை: தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் ஒன்பது கிரானைட் சுரங்கங்கள் 10 கோடி செலவில் மின்மயமாக்கப்படும் என்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை அமைச்சர் துரைமுருகன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:
> கனிம ஆய்வினை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு மாநிலக் கனிம ஆய்வு நிதியம் உருவாக்கப்படும்.
தமிழ்நாட்டில் படிந்துள்ள கனிமங்களின் இருப்பு, தரம், புவியமைப்பியல் ஆகியவற்றை அறியும்பொருட்டு கனிம ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு மாநிலக் கனிம ஆய்வு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்நிதியத்திற்கு சிறுகனிம குத்தகைதாரர்கள் செலுத்தும் உரிமக் கட்டணத்தில் 2% தொகை நிதியாக பெறப்படும்.
இதனை மேற்கொள்ள தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959ல் திருத்தம் மேற்கொள்ளப்படும். சிறுகனிம குத்தகைதாரர்களிடமிருந்து பெறப்படும் 2% உரிமைத்தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் 6 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
> தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் எரிவாயுவமை பயன்படுத்தி கிராபைட் கனிமத்தை உலர்த்தும் முறை 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனம், சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராபைட் ஆலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உற்பத்தியை மேம்படுத்த 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில், டீசலுக்கு பதிலாக எரிவாயுவை பயன்படுத்தி கிராபைட்டை உலர்த்தும் முறை செயல்படுத்தப்படும். இதன்மூலம் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டு எரிபொருள் செலவு 25 சதவீதம் மீதமாகும்.
> தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் ஒன்பது கிரானைட் சுரங்கங்கள் 10 கோடி செலவில் மின்மயமாக்கப்படும்.
தமிழ்நாடு கனிம நிறுவனம் சுரங்கப்பணி மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டும், எரிபொருள் செலவினைக் கட்டுப்படுத்தும் பொருட்டும் நிலையான சுரங்க பணிகளுக்காக 10 கோடி ரூபாய் செலவில் ஒன்பது கிரானைட் சுரங்கங்கள் மின்மயமாக்கப்படும். இதன்மூலம் கார்பன் உமிழ்வு (Carbon foot print ) குறைக்கப்படுவதுடன் எரிபொருள் செலவு சுமார் 40 சதவீதம் மீதமாகும்.